இலங்கை முதல் கனடா, அமெரிக்கா வரை: உலக உணவுப்பிரச்சினை அச்சுறுதல் என்பது உக்ரைனுக்கு மட்டுமல்ல
மத்திய காலகட்டம் என அழைக்கப்படும் 5 முதல் 16ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில், போர் என்பது கூடவே மற்றொரு எதிரியையும் அழைத்துவரும் என்னும் கசப்பான விடயத்தை மக்கள் நன்கு அறிந்துவைத்திருந்தார்கள்.
அந்த எதிரி: பஞ்சம்!
உலகம் முழுவதும் பயங்கரமான பசிப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம் என்று சென்ற மாதம் எச்சரித்திருந்தார் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செக்ரட்டரி ஜெனரலான அன்டோனியோ குட்டெரஸ். கடந்த இரண்டு ஆண்டுகளில், கடுமையான உணவுப்பாதுகாப்பின்மை கொண்ட மக்களுடைய எண்ணிக்கை இரட்டிப்பாகி, 276 மில்லியனாகியுள்ளது. 2022இலேயே பல பஞ்சங்கள் உருவாகும் அபாயமும் உள்ளது. 2023இன் நிலைமையோ மேலும் மோசமடைய உள்ளது என்று கூறியுள்ளார் அவர்.
சமீபத்தில், கருங்கடல் துறைமுகத்தில் சிக்கியிருக்கும் உணவு தானியங்களை வெளியே கொண்டுவருவது தொடர்பில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம் ஒன்று புதிதாக ஒரு நம்பிக்கைக் கீற்றை உருவாக்கியுள்ளது.
ஆனால், ரஷ்யாவின் நம்பகத்தன்மை மீது கனடாவுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ள கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, அவர்கள் நம்பும் அளவுக்கு எதையும் செய்யவில்லை என்றார். ஆனாலும், நல்லது நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார் ட்ரூடோ.
சில நாடுகளுக்கு நிவாரணம் எளிதில் வரும் சூழல் தற்போது காணப்படவில்லை. உலகம் முழுவதும் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இலங்கையிலோ, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, அது சராசரியாக 57 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 30 சதவிகித குடும்பங்கள் பசியால் வாடும் நிலை உருவாகி, அரசை கவிழ்க்கும் அளவுக்கு அது அதிகரித்தும், நிலைமை சீரடையவில்லை.
உர இறக்குமதி மீதான தடை முதலான உள்நாட்டுப்பிரச்சினைகள், உலகப் பிரச்சினையாகிய உக்ரைன் போர் போன்ற பிரச்சினைகள் மொத்தத்தில் பிரச்சினைகளை பூதாகரமாக்கிவிட்டன.
ஆனால், இந்த பிரச்சினைகள் தற்காலிக இடையூறுகள்தான் எனலாம். ஏனென்றால், இன்னும் பல பெரிய விடயங்கள் நீண்ட கால அளவில் உலகம் தன் மக்களுக்கு உணவளிக்க முடியாத ஒரு நிலையை உருவாக்கக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன. கனடாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
அவற்றில் சில பிரச்சினைகளைக் குறித்து பார்க்கலாம்.
விவசாய நிலங்கள் வீடாக மாற்றப்படுதல்
Canadian Press
கனடாவின் இந்த ஆண்டு விவசாய கணக்கெடுப்பில், 2021ஆம் ஆண்டில், ஒன்ராறியோவிலுள்ள விவசாய நிலம், நாளொன்றிற்கு 319 ஏக்கர்கள் கட்டிடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உணவு விவசாயம் செய்யும் இடத்தில் குடியிருப்புகள் தோன்ற, அவை அதிகரித்துக்கொண்டே செல்ல, நல்ல விவசாய நிலம் வீணாகிறது.
உலகம் முழுவதுமே விவசாய நிலம் சுருங்கி வருகிறது
Adrian Wyld/The Canadian Press
கனடாவின் மொத்த விவசாய நிலம், 2016க்கும் 2021க்கும் இடையில் மட்டுமே மூன்று சதவிகிதம் சுருங்கியுள்ளது.
பருவநிலை மாற்றம் விளைச்சலை பாதிக்கிறது
Nati Harnik/Associated Press)
பருவநிலை மாற்றத்தின் பயங்கர விளைவுகள் பலவகையில் பயிர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன.
இதுபோக, மருந்துகளுக்கு அடங்காத களைகள், பூச்சிகள், மண் அரிப்பு என பல்வேறு விடயங்கள் விவசாயத்தை பாதித்துவரும் நிலையில், உலகம் இன்னொரு பசுமைப் புரட்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டால்தான், தன் மக்களின் பசியை அதனால் தீர்க்கமுடியும்.
இது கனடாவுக்கோ, உக்ரைனுக்கோ, இலங்கைக்கோ மட்டுமல்ல, முழு உலகுக்கும் தேவை!