கனடாவில் கொரோனாவால் வேலை இழந்த புலம்பெயர்ந்தோர்... விசா தாமதமாவதால் பரிதவிப்பு
கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று காரணமாக வேலை போய்விட, விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பழைய வேலைக்கும் போகமுடியாமல், புதிய வேலையையும் தேடிக்கொள்ள இயலாமல் தவித்து வருகிறார்.
2016ஆம் ஆண்டு, இத்தாலியிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர் Danilo Pizzoleo (25).
ஆனால், பீட்ஸா தயாரிக்கும் வேலையிலிருந்த Daniloவுக்கு கொரோனா தொற்று உருவாக, அவர் வேலையைத் தொடரமுடியாமல் போய்விட்டது.
இதற்கிடையில் அவரது விசா முடியும் காலம் நெருங்கியதையடுத்து, பணி விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்தார் Danilo.
பொதுவாக விசா நீட்டிப்பு குறித்த முடிவுகள் எடுக்க ஆறு மாதங்கள் வரை ஆகும் நிலையில், Danilo விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்து 9 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், அவரது விசா குறித்து பதிலும் கிடைக்கவில்லை.
இது குறித்து பெடரல் புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அமைச்சகத்திடம் விசாரித்தபோது, Danilo தனது விசா காலாவதியாகும் முன்னரே விசா நீட்டிப்புக்கு விண்ணப்பித்துவிட்டதால் அவரது தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் நிலை தொடர்ந்து நீடிப்பதாகவும், ஆகவே, தான் முன்பு பார்த்த வேலையைத் தொடரலாம் என்றும் மின்னஞ்சல் மூலம் பதில் கிடைத்துள்ளது.
பிரச்சினை என்னவென்றால், Daniloவுக்கு ஒரு பணி வழங்குவோரிடம் வேலை செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த பீட்ஸா செய்யும் வேலைக்கு மட்டுமே அவர் திரும்ப முடியும். ஆனால், கொரோனா காரணமாக அவர் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டதால் மீண்டும் அவரால் அதே வேலைக்குத் திரும்ப முடியாது.
ஆக, வேலையைத் தொடர அரசு அனுமதி உள்ள நிலையிலும், வேலைக்குச் செல்ல இயலாமலும், விசா நீட்டிக்கப்படாததால் புதிய வேலைக்குச் செல்ல இயலாமலும் பரிதவித்து வருகிறார் Danilo.
தான் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தை மட்டுமே நம்பி ஓராண்டாக வாழ்ந்து வருவதாக கவலையுடன் தெரிவிக்கிறார் Danilo.