விமான சேவைகள் முடங்கும்... இந்திய அரசுக்கு நிறுவனங்கள் விடுத்த எச்சரிக்கை
ஈரான் மீதான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் விமான எரிபொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது.
விமான எரிபொருள்
பிப்ரவரி 28ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடங்கி, தற்போது இரண்டு மாத காலம் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த இரண்டு மாதமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி எதுவும் நடைபெறவில்லை. இதன் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டும் இல்லாமல் விமான எரிபொருள்களின் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. விமான சேவை நிறுவனங்கள் பல தற்போது நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக இந்திய அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றன.
இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு இந்திய விமான சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதி இருக்கிறது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் கூட்டாக அனுப்பி இருக்கக்கூடிய இந்த கடிதத்தில்,
விமான எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது, விமான சேவை நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால் அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உதவி செய்ய முன்வர வேண்டும் இல்லை என்றால் விமான சேவையை இழுத்து மூட வேண்டியதிருக்கும் எனக் கூறியுள்ளன.
விமான சேவை துறை மிகப் பெரிய ஒரு சிக்கலில் தவித்து வருகிறது என குறிப்பிட்டு இருக்கும் இந்த நிறுவனங்கள், இந்தியா முழுவதும் விமான சேவைகளை நிறுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம் எனக் கூறியிருக்கின்றன.
செயல்படவே முடியாத நிலை
உலக சந்தையில் விமான எரிபொருட்களின் விலை கணிக்க முடியாத அளவில் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இதனால் தங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளில் பெரிய தாக்கம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறி இருக்கின்றன.
குறிப்பாக சர்வதேச வழித்தடங்களில் விமானங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளன. வெளிநாட்டு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும் விமான எரிபொருட்களின் விலை லிற்றருக்கு 75 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. இதனால் சில வழித்தடங்களில் விமான சேவையை இயக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளன.

விமான எரிபொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் விமான சேவை வழங்குவதற்கான செலவினம் 40 லிருந்து 60 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாகவும் அதனை அப்படியே பயணிகள் மீதும் சுமத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
செயல்படவே முடியாத நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக இந்திய விமான சேவை நிறுவனங்கள் நகர்ந்து வருவதாகவும் கூறி இருக்கின்றன.
இந்திய அரசு தற்காலிகமாக விமான எரிபொருட்களுக்கு சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும், வாட் உள்ளிட்ட வரிகளை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |