முழுமையாக தடுப்பூசி பெற்றாயிற்று... வெளிநாடு சுற்றுலா செல்ல தயாராக இருக்கிறீர்களா?: பொறுங்கள் இன்னமும் பிரச்சினைகள் உள்ளன
ஜூலை மாத துவக்கத்தில், முழுமையாக தடுப்பூசி பெற்ற கனேடியர்கள் வெளிநாடு சென்று திரும்பும்போது தங்களை தனிமைப்படுத்திகொள்ளவேண்டியதில்லை என பெடரல் அரசு அறிவித்ததும், வெளிநாட்டு சுற்றுலா செல்ல ஆவலாக இருந்த பலர் பரபரவென விடுமுறைக்கான திட்டங்களை தீட்டத் துவங்கினார்கள்.
ஆனால், கொரோனா காலகட்டத்தில் வெளிநாடு செல்வது இன்னமும் குழப்பத்துக்குரிய விடயமாகவே காணப்படுகிறது. ஆகவே வெளிநாட்டுப் பயணத்தை கனடா அரசு இன்னமும் பரிந்துரைக்கவில்லை.
கனடாவின் பொது சுகாதார ஏஜன்சி, கனடாவில் கொரோனா நிலைமை மேம்பட்டுள்ளதால் முழுமையான தடுப்பூசி பெற்றவர்களுக்கான கட்டுப்பாடுகளை நெகிழ்த்தியுள்ளது. ஆனால், இன்னமும் சில நாடுகளில் திடீர் மாற்றம் பெற்ற கொரோனா தொற்று அதிக அளவில் காணப்படுகிறது. ஆகவே, தடுப்பூசி பெற்றவர்களுக்கான கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டாலும், இன்னமும் வெளிநாட்டுப் பயணத்தைத் தவிர்க்குமாறே கனடா அரசு கூறிவருகிறது.
அத்துடன், கனேடியர்கள் வெளிநாடு ஒன்றிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு திடீரென பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால் அவர்கள் அங்கு தேவையில்லாமல் நீண்ட காலம் சிக்கிக்கொள்ள நேரிடலாம் என்றும் கனடாவின் பொது சுகாதார ஏஜன்சி எச்சரிக்கிறது.
தொற்று நோயியல் நிபுணரான Nazeem Muhajarine, கனேடியர்கள் வெளிநாட்டுப் பயணத்துக்கு திட்டமிடும் முன், கனடாவில் தாங்கள் இருக்கும் இடத்திலும், தாங்கள் செல்லும் நாட்டிலும் கொரோனா நிலைமை எப்படி உள்ளது என்பதை கருத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிடுமாறு ஆலோசனை கூறுகிறார்.
Mozambique நாட்டுக்கு வேலை விடயமாக பயணம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டபோதும், தான் வாழும் Saskatchewanஇலும், Mozambique நாட்டிலும் கொரோனா நிலைமை மோசமாக உள்ளதால், தான் பயணத்தையே ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கிறார் Nazeem.
நாம் கொரோனாவின் நான்காவது அலையின் நடுவில் இருக்கிறோம். ஆகவே, முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்தாலும் நான் பயணம் செய்வது முறையல்ல என கருதுகிறேன் என்கிறார் அவர்.
கனடாவைப் போல சில நாடுகள் முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளை அனுமதிக்கின்றன. ஆனால், அந்த நாட்டில் எந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு அனுமதி உள்ளதா என்பதையும் பயணம் செய்ய விரும்புவோர் கவனத்தில் கொள்வது நல்லது.
அத்துடன், காப்பீடு வழங்குவதிலும் பல்வேறு விதிமுறைகள் உள்ளன என்பதால், அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எனவே, கனடாவில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு விதிகள் நெகிழ்த்தப்பட்டுள்ளன என்ற ஒரே காரணத்துக்காக உடனடியாக வெளிநாடு பயணம் குறித்து திட்டமிடாமல், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டால், தேவையில்லாத சிக்கல்களை தவிர்க்கலாம்.