எகிறும் நிதியுதவி... பரவலாக கிண்டலடிக்கப்பட்ட ஜேர்மன் சிறுமியை தேடும் பிரித்தானியர்
இங்கிலாந்து தேசிய அணியுடன் ஜேர்மன் கால்பந்து அணி யூரோ கிண்ணம் தொடரில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் கண்ணீர் விட்டு கதறிய ஜேர்மன் சிறுமியை பிரித்தானியர் ஒருவர் தேடி வருகிறார்.
இணையத்தில் பரவலாக இங்கிலாந்து ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்ட நிலையில், அந்த ஜேர்மன் சிறுமியை தேற்றும் வகையில், பொதுமக்களிடம் இருந்து 500 பவுண்டுகள் சேகரித்து அவருக்கு வழங்க 51 வயதான Joel Hughes என்ற கால்பந்து ரசிகர் திட்டமிட்டார்.
ஆனால், தற்போது அந்த தொகை 27,000 பவுண்டுகளை எட்டியுள்ளது. ஆனாலும், குறித்த சிறுமியை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
வெம்ப்லி மைதானத்தில் நடந்த போட்டியில் ஜேர்மனி அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து, தங்கள் அணியின் தோல்வியை ஏற்க முடியாமல் ஜேர்மன் சிறுமி ஒருவர் கதறும் காட்சி ஊடகங்களில் வெளியாகி, அது இங்கிலாந்து ரசிகர்களின் மிக மோசமான விமர்சனங்களுக்கு இலக்கானது.
தற்போது அந்த சிறுமியை தேடி வரும் Joel Hughes, ஜேர்மானிய ஊடகவியலாளர்கள் சிலரிடம் உதவி கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சிறுமியை கண்டுபிடிக்க முடியாமலோ, அல்லது அந்த குடும்பத்தினருக்கு தாம் உதவுவதில் ஏற்புடையது இல்லை என்றால், இதுவரை சேகரித்த தொகையை இன்னொரு நற்செயலுக்காக பயன்படுத்தப்படும் என்றார்.