ரஷ்யாவே காரணம்... ஜி20 கூட்டத்தில் இருந்து வெளியேறிய கனடா நிதியமைச்சரால் பரபரப்பு
அமெரிக்காவில் நடந்த ஜி20 கூட்டத்தில் இருந்து கனடாவின் துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland வெளியேறி ரஷ்யாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஜி20 உறுப்பு நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான கூட்டம் ஒன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ரஷ்யாவும் தொடர்புடைய கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதால், கனடா நிதியமைச்சர் Chrystia Freeland மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் சிலர் கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
This week’s meetings in Washington are about supporting the world economy – and Russia’s illegal invasion of Ukraine is a grave threat to the global economy. Russia should not be participating or included in these meetings. #G20 #IMFMeetings
— Chrystia Freeland (@cafreeland) April 20, 2022
இதனையடுத்து தமது சமூக ஊடக பக்கத்தில், வாஷிங்டனில் இந்த வார கூட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை ஆதரிப்பது பற்றியது. ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்பு என்பது உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இதனால், தொடர்புடைய கூட்டங்களில் ரஷ்யா பங்கேற்கவோ அல்லது சேர்க்கவோ கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கூட்டத்தில் ரஷ்ய நிதியமைச்சர் காணொளி வாயிலாக கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கனடா நிதியமைச்சர் உட்பட்ட குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தொடரும் ரஷ்ய படையெடுப்பு மற்றும் போர்க்குற்றங்களுக்கு முன்னால் உலக ஜனநாயக நாடுகள் வேடிக்கை பார்க்காது எனவும் கனடா நிதியமைச்சர் Chrystia Freeland குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் இருந்து கனடா நிதியமைச்சருடன் மத்திய வங்கி ஆளுநர், அமெரிக்க அதிகாரி ஒருவர், உக்ரைன் நிதியமைச்சர் மற்றும் ஐரோப்பிய அதிகாரி ஒருவர் என வெளியேறியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.