வீட்டிற்குள் புகுந்த கங்கை வெள்ளம்.., பால் ஊற்றி புனித நீராடிய பொலிஸ் அதிகாரி
வீட்டிற்குள் புகுந்த கங்கை நீரில் பால் ஊற்றி புனித நீராடிய பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொலிஸின் செயல்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கங்கை, யமுனை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பிரயாக்ராஜ் நகரின் தாராகஞ்ச், ராஜாபூர், சலோரி உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக அங்கிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 1,400 பேர் அங்கிருந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநில காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் சந்திரதீப் நிஷாத் என்பவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், "நேற்று நான் பணிக்கு புறப்பட்டபோது என்னுடைய தாய் கங்கா என் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடன் ஆசி பெற்று சென்றேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த வீடியோவில், சீருடையில் இருந்த அவர் தன் வீட்டு வாசலில் சூழ்ந்துள்ள கங்கை வெள்ளத்தில் ரோஜா இதழ்களை தூவுகிறார். பின்னர் அதன் மீது பாலை ஊற்றுகிறார்.
இதையடுத்து, மேலாடை இல்லாமல் இடுப்பளவு தண்ணீர் இறங்கி கங்கை தாயை வணங்கியபடி புனித நீராடுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |