டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி ரஹானே, புஜாரா நிலைமை என்ன? - கங்குலி முடிவால் பரபரப்பு
இந்திய அணியின் மூத்த வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பி வந்த இந்திய அணியின் மூத்த வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கொடுத்த வாய்ப்பை எல்லாம் கோட்டை விட்ட அவர்களை இனி டெஸ்ட் அணியில் சேர்க்கக்கூடாது என பலரும் விமர்சித்தனர்.
இதனிடையே பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இம்மாத இறுதியில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதை நிராகரித்துள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி புஜாரா, ரஹானே இருவரும் ரஞ்சிக் கோப்பைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்கள் அதில் கலந்துக்கொண்டு நிறைய ரன்களை குவித்து தங்களை நிரூபித்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ரஞ்சிக்கோப்பை தொடர் கௌரவமான தொடர் தான் என்றும், இதில் விளையாடுவது தவறில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.அவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே அவர்கள் ரஞ்சிக் கோப்பைக்கு சென்று, சிறப்பாக ஆடினால் தான் இனி எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்த சில நாட்களுக்கு பெரியளவில் டெஸ்ட் தொடர்கள் இல்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் மீண்டு வர வேண்டும் என கங்குலி தெரிவித்துள்ளார்.
இதனை ரஹானே, புஜாரா சரியாக பயன்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.