உலகம் இதுவரை கண்டிராத மிகச்சிறந்த வீரர் கோஹ்லி! புகழ்ந்து தள்ளிய ஜாம்பவான் தாதா
விராட் கோஹ்லி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் உலகின் மிகச் சிறந்த வீரர் என புகழ்ந்துள்ளார்.
சவுரவ் கங்குலி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், வங்காள U15 மகளிர் வீராங்கனைகளுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்ட பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், 'தாதா' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஜாம்பவான் வீரருமான சவுரவ் கங்குலி, துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி குறித்து பேசினார்.
ஆச்சரியமாக இருந்தது
அவர் கூறுகையில், "மகளிர் கிரிக்கெட்டில் எப்படி ஜூலன் கோஸ்வாமி மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் சிறந்த வீராங்கனைகளோ, அதேபோல் ஆடவர் கிரிக்கெட்டில் கோஹ்லி வாழ்நாள் சிறந்த வீரர் ஆவார். கிரிக்கெட் வாழ்வில் 80 சதங்களை அடிப்பது என்பது நம்பமுடியாத ஒன்று.
என்னைப் பொறுத்தவரை, கோஹ்லி உலகம் இதுவரை கண்டிராத மிகச்சிறந்த வெள்ளைப்பந்து வீரர். பெர்த்தில் சதம் அடித்த பிறகு, அவர் துடுப்பாட்டம் செய்த விதம் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
உலகில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் அவரவர் பலவீனங்களும், பலங்களும் உள்ளன. உலகில் அது இல்லாத எந்த வீரரும் இல்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் சிறந்த பந்துவீச்சாளர்களை விளையாடும்போது, உங்கள் பலவீனங்களை எவ்வாறு மாற்றிக் கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |