உச்சம் தொடும் பூண்டு விலை: 1 கிலோ ரூ.500-க்கு விற்பனை
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிகரிக்கும் பூண்டு விலை
பூண்டு பல மருத்துவ குணங்களை கொண்டது என்பது ஒருபுறம் இருந்தாலும், நீங்கள் சமைக்கும் உணவு அசைவமோ அல்லது சைவமோ அதன் சுவையை அதிகரிக்க பூண்டு இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகிறது.
நமது தினசரி உணவில் அத்தியாவசியம் ஆகிவிட்ட பூண்டின் ஒரு கிலோ விலை தற்போது ரூ.500 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பூண்டு நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால் தற்போது நீலகிரி மாவட்டத்தில் இருந்து அனுப்பப்படும் பூண்டின் வரத்து குறைந்து இருப்பதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தட்டுப்பாடு அதிகரித்து 1கிலோ பூண்டின் விலை 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிற மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்து இருப்பதால் இந்த விலை ஏற்றம் உருவாகி இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பூண்டு விலையேற்றத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், வணிகர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூண்டு விலையேற்றத்தின் பாதிப்பு
ஏற்கனவே இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்வு, அரிசி விலை உயர்வு, மற்றும் கோழி இறைச்சி உயர்வு ஆகியவை இன்னல் கொடுத்து வரும் நிலையில் பூண்டின் தட்டுப்பாடும் சிக்கலை அதிகரித்துள்ளது.
அசைவ உணவுகளில் அதிக அளவில் பூண்டு பயன்படுத்தப்படுவதால் இந்த விலையேற்றம் அசைவ உணவகங்களின் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துரித உணவுகளிலும் இஞ்சி பூண்டு பயன்பாடு இருப்பதால் அதன் விலையும் உயரக்கூடும் அபாயம் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |