சூர்யா இந்தியர் இல்லையா? தேசப்பற்று இல்லாதவர் நாட்டை விட்டு சென்றுவிடலாம்! கடுமையாக விமர்சித்த காயத்ரி ரகுராம்
ராக்கெட்ரி படத்தில் சூர்யா நடித்த காட்சியை வைத்து தமிழக பாஜக நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சூர்யா ஒரு காட்சியில் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்த மாதவனை பேட்டி எடுப்பார். அப்போது பேட்டி முடிந்ததும் மாதவன் 'ஜெய் ஹிந்த்' என்று கூறுவார். ஆனால் சூர்யா ஜெய் ஹிந்த் என்று கூறமாட்டார்.
இதனை குறிப்பிட்டு காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், 'நம்பி நாராயணன் ஜெய் ஹிந்த் என்று கூறி முடிப்பார். இந்தி மொழியில் பேட்டி எடுத்த நடிகர் ஷாருக் கானும் பதிலுக்கு ஜெய் ஹிந்த் என்று கூறுவார். தமிழில் சூர்யா பேட்டி எடுப்பார், ஆனால் ஜெய் ஹிந்த் என்று கூறி பேட்டியை முடிக்க மாட்டார். இது என்ன முரண்பாடு என புரியவில்லை.
சூர்யாவுக்கு ஜெய் ஹிந்த் பிடிக்கவில்லையா? அல்லது படக்காட்சி அமைப்பே அப்படித் தான் எடுக்கப்பட்டுள்ளதா? சூர்யா இந்தியா வாழ்க (ஜெய் ஹிந்த்) என்ற வார்த்தையை கூற மாட்டார் என்றால் அது என்ன கொச்சை வார்த்தையா? ஒருவேளை அவருக்கு இந்தி தெரியாததால் அவர் அந்த வார்த்தையை சொல்ல மறந்திருந்தாலோ, மறுத்திருந்தாலோ இந்தி மொழியை இலவசமாக கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்.
ஜெய் ஹிந்த் என சூர்யா சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியர் இல்லையா? அவர் அந்த வார்த்தையை சொல்லவே மாட்டேன் என்று அடம் பிடித்திருந்தால், அவருக்கு இந்தியாவில் என்ன வேலை? தேசப் பற்று இல்லாதவர், இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடலாம்.
அதற்கு என்ன தேவையோ, அதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன். சூர்யா சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர் திட்டமிட்டே இந்த காரியத்தை செய்தார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.