ஐபிஎல்லில் எனக்கான மரியாதை இல்லை.. திரும்பி வருவேன்! கிறிஸ் கெயில் அதிரடி
கிறிஸ் கெயில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்று வரும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெயில் 2022 சீசனில் விளையாடவில்லை. கொல்கத்தா அணிக்காக முதலில் விளையாடிய கெயில், அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக ஒப்பந்தம் ஆனார். அந்த அணியில் சிறப்பாக விளையாடிய அவர் கடைசியாக பஞ்சாப் அணியில் களமிறங்கினார்.
ஐபிஎல்-யில் அவர் சிறந்த கரியரை வைத்துள்ள போதிலும், வயது காரணமாக அவர் நடப்பு தொடரில் ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சாப் அல்லது பெங்களூரு ஆகிய இரு அணிகளில் ஒன்றுக்காக களமிறங்கி கோப்பையை வெல்ல வைப்பேன் என தனது விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'கடந்த இரண்டு வருடங்களாக, ஐபிஎல் நடந்த விதத்தில், நான் சரியாக நடத்தப்படவில்லை என உணர்ந்தேன். அதனால் நான் நினைத்தேன் விளையாட்டிற்கும், ஐபிஎல்லுக்கும் இவ்வளவு செய்த பிறகும் தகுதியான மரியாதை கிடைக்கவில்லை. அவர்களுக்கு நான் தேவை. அடுத்த ஆண்டு நான் திரும்ப வருவேன்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளுக்காக பங்கேற்றுள்ளேன். என்னை நானே ஆராயவும், சவால்களை ஏற்றுக்கொள்ளவும் விரும்புகிறேன், ஆகையால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்' என தெரிவித்துள்ளார்.
42 வயதான கிறிஸ் கெயில் 142 ஐபிஎல் போட்டிகளில் 4965 ஓட்டங்களுடன், 6 சதம் மற்றும் 31 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.