2024 பொதுத் தேர்தல்: 690 வேட்புமனுக்கள் ஏற்பு, 74 நிராகரிப்பு!
நாடளாவிய ரீதியில் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 2024 பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களால் மொத்தம் 764 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடமிருந்து 690 வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததையடுத்து நேற்று (11) மாலை செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அதிகளவான வேட்பு மனுக்கள் 72 பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதில் 08 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் 64 ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 15 வேட்புமனுக்கள் இணைந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேட்புமனுக்கள் கிடைத்துள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
விருப்பு எண்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 4 ஆம் திகதி தொடங்கி நேற்று (அக்டோபர் 11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |