2024 பொதுத் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டெம்பர் 30 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ரத்நாயக்க, அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் போன்று இத்தேர்தலுக்கும் 2024 வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும் என விளக்கமளித்தார்.
இதனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு தபால் மூல விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்கள் இந்தத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.
“இந்தத் தேர்தலில், அதே வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்துவதால், கடந்த தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களின் அனைத்து தரவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன” என ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கடந்த தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு நிராகரிக்கப்பட்ட நபர்கள், தபால் வாக்களிக்க மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த விண்ணப்பதாரர்கள் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கடைப்பிடிக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகள் நாடாளுமன்றத் தேர்தல்கள் ஆரம்பமாகவுள்ள நிலையிலும் அமுலில் இருக்கும்.
2024 வாக்காளர் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மொத்தம் 1,714,354 வாக்காளர்கள் நவம்பர் 14 ஆம் திகதி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களைக் கருத்தில் கொண்டு, மிகக் குறுகிய காலத்திற்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |