பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு
பிரித்தானியாவில் அடுத்த பொதுத் தேர்தல் ஜூலை 4ம் திகதி முன்னெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றி வாய்ப்பு லேபர் கட்சிக்கு
குறித்த தகவலை பிரதமர் ரிஷி சுனக் இன்று மதியத்திற்கு மேல் அறிவிப்பார் என்றே கூறப்படுகிறது. மேலும், அனைத்து அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் லார்ட் கேமரூன் அல்பேனியாவிற்கு விஜயம் செய்து வந்த நிலையில், உடனடியாக நாடு திரும்பியுள்ளார். உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 5 மணிக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை விடவும் வெற்றி வாய்ப்பு லேபர் கட்சிக்கு இருப்பதாகவே கூறப்படுகிறது. இதுவரையான கருத்துக்கணிப்பில் லேபர் கட்சி 44 சதவிகிதத்துடனும் கன்சர்வேடிவ் கட்சி 23 சதவிகிதத்துடனும் உள்ளது.
105 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இந்த நிலையில் விலைவாசி உயர்வு பெருமளவு சரிவை சந்தித்துள்ள நிலையிலேயே தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் 3.2 சதவிகிதமாக இருந்த விலைவாசி உயர்வு இன்று வெளியான அறிக்கையில் 2.3 சதவிகிதம் என பதிவாகியுள்ளது.
அதாவது இங்கிலாந்து வங்கியின் 2 சதவிகிதம் என்ற இலக்கை மிகவும் நெருங்கியுள்ளதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல்களில் கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள கன்சர்வேடிவ் கட்சி பரப்புரையில் மக்கள் ஆதரவைப் பெற முடிந்தால் மட்டுமே ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
மட்டுமின்றி ரிஷி சுனக் கட்சி 474 கவுன்சிலர்களை இழந்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் 105 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி போட்டியிடுவதில்லை எனவும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |