மேலும் புதிதாக மரபணு மாற்ற கொரோனா வைரஸ்கள் உருவாகலாம்: கனேடிய நிபுணர்கள் கருத்து...
Omicron வகை மரபணு மாற்றக் கொரோனா வைரஸ் படுவேகமாக பரவிக்கொண்டிருக்க, தடுப்பூசி பெற்றோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில், மேலும் புதிதாக மரபணு மாற்றக் கொரோனா வைரஸ்கள் உருவாக வாய்ப்புள்ளது என்கிறார்கள் கனேடிய நிபுணர்கள்.
முந்தைய தொற்று காரணமாகவும் தடுப்பூசிகள் காரணமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ள மக்களிடையேயே Omicron வகை மரபணு மாற்றக் கொரோனா வைரஸ் வேகமாக பரவுமானால், அது மேலும் மாற்றங்களை அடையலாம் என்கிறார்கள் அவர்கள்.
ஒரு பக்கம் Omicron வகை மரபணு மாற்றக் கொரோனா வைரஸ், கோவிட் தொற்றின் முடிவின் ஆரம்பமாக இருக்கலாம் என்ற கருத்தும் காணப்படும் நிலையில், அதுவும் சாத்தியம்தான் என்று கூறும் அறிவியலாளர்கள், அதே நேரத்தில், பொதுவாக வைரஸ்கள் தீவிரம் குறைந்தவையாக மாறுவதில்லை என்றும் கூறுகிறார்கள்.
வைரஸ்கள் பல வகைகளில் பரிமாண வளர்ச்சி அடையலாம் என்கிறார்கள் அவர்கள். உதாரணமாக விலங்குகளுக்குள் புகும் வைரஸ்கள், அவற்றின் உடலுக்குள் காத்திருந்து, பின்னர் புதிய மரபணு மாற்ற வைரஸாக வெளிப்படலாம். பின்னர் அவை மனிதர்களைத் தாக்கலாம் என்பது அவர்கள் கருத்து.
ஆகவேதான், இன்னமும் மக்களை, மாஸ்க் அணியுங்கள், சுகாதாரக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள் என்று அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள் மருத்துவர்கள்.
எவ்வளவுதான் தடுப்பூசிகள் குறித்து அறிவுறுத்தியும் இன்னமும் முழுமையாக உலகம் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், புதிதாக மரபணு மாற்ற வைரஸ்கள் உருவாகுவதைத் தவிர்க்க முடியாது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.