உலகத்தைக் காப்பாற்ற புகைப்படங்களை டெலீட் செய்யுங்கள்: சுவிட்சர்லாந்தின் வித்தியாசமான கோரிக்கை
உலகத்தைக் காப்பாற்ற புகைப்படங்களை டெலீட் செய்யுங்கள் என வித்தியாசமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது சுவிட்சர்லாந்து அரசு.
புகைப்படங்களை டெலீட் செய்யுங்கள்
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, தினமும், குறைந்தது ஐந்து முதல் ஐந்தரை மணி நேரம் வரை மக்கள் இணையத்தில் செலவிடுகிறார்கள் என்கிறார்கள் சுவிஸ் அதிகாரிகள்.

இந்த டிஜிட்டல் பயன்பாடு, நாட்டின் பசுமை வாயு வெளியீட்டில் இரண்டு சதவிகிதத்துக்குக் காரணமாக அமைகிறதாம்.
ஆகவே, தொழில்நுட்பம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு நாளையே அதற்காக ஒதுக்கியுள்ளது சுவிஸ் மாகாணம் ஒன்று.
ஆம், ஜெனீவா மாகாணம், இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 20ஆம் திகதியை, digital detox day என அறிவித்துள்ளது.
அதாவது, மக்கள் நேரம் ஒதுக்கி, தேவையற்ற கோப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை நீக்கி, அதன் மூலம் தங்கள் மின்னணு சாதனங்களின் ஆயுளை நீட்டிக்கவும் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்.
விடயம் என்னவென்றால், இசை, புகைப்படங்கள் மற்றும் பிற கோப்புகளை கிளௌட் சேமிப்பகத்தில் சேமிப்பதற்கு குறிப்பிடத்தக்க அளவில் ஆற்றல் தேவைப்படுகிறது.
அத்துடன், AI பயன்பாடும் அதிக அளவில் ஆற்றலை உறிஞ்சுவதால், AI பயன்பாட்டையும் குறைத்துக்கொள்ள மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு, பிரித்தானியாவில் தண்ணீர்ப் பஞ்சத்தை தவிர்க்க உங்கள் பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்யுங்கள் என வித்தியாசமான கோரிக்கை ஒன்றை பிரித்தானிய அரசு விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
அதாவது, மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் ஆகியவை, தரவு மையங்களில் (data centers) சேமித்துவைக்கப்படும். இந்த தரவு மையங்களை சூடாகாமல் தவிர்க்க, அதாவது, அவற்றை குளிர்ச்சியாக வைக்க, அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும்.
ஆகவேதான், தரவு மையங்கள் சூடாகாமல் தவிர்ப்பதற்காக, அவற்றை குளிர்விப்பதற்காக தண்ணீர் வீணாகாமல் தடுப்பதற்காக, பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்யுமாறு பிரித்தானிய அரசு மக்களைக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |