உங்களுக்கு ஜேர்மனியில் குடியேறும் திட்டம் இருக்கிறதா?: உங்களுக்கான ஒரு முக்கிய செய்தி
உங்களுக்கு ஜேர்மனியில் குடியேறும் திட்டம் இருக்கிறதா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்காகத்தான்!
நீங்கள் எதிர்காலத்தில் ஜேர்மனியில் குடியேற விரும்பினால், உங்கள் உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்கு நீங்கள் ஒன்றில் நிரந்தர வாழிட உரிமம் அல்லது ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
சரி, நிரந்தர வாழிட உரிமம் என்றால் என்ன, ஜேர்மன் குடியுரிமை என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு அல்லாத ஒரு நாட்டிலிருந்து ஜேர்மனிக்கு வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்... அப்படியானால், நீங்கள் ஒரு வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்கவேண்டும். இந்த வாழிட உரிமம் பொதுவாக, பணி அல்லது கல்வி நோக்கில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். அது காலாவதியாக இருக்கும் நிலையில், நீங்கள் மறுபடியும் அந்த உரிமத்துக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
ஆனால், நீங்கள் ஜேர்மனியிலேயே செட்டில் ஆக விரும்பினால், அதற்கு இரண்டு விருப்பத்தேர்வுகள் (options) உள்ளன. ஒன்று நிரந்தர வாழிட உரிமம், இன்னொன்று ஜேர்மன் குடியுரிமை. இவற்றிற்கு விண்ணப்பிக்கவேண்டுமானால், நீங்கள் ஏற்கனவே நீண்ட காலமாக ஜேர்மனியில் வசித்து வருபவராகவும், ஜேர்மன் மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்பவராகவும் இருக்கவேண்டும்.
நிரந்தர வாழிட உரிமம்
நிரந்தர வாழிட உரிமம் குறித்து முதலில் பார்க்கலாம்
நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்களுக்கு இரண்டாண்டுகள் அல்லது மூன்றாண்டுகளுக்கொருமுறை மீண்டும் மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
நிரந்தர வாழிட உரிமம் பெறுவதன் மற்றொரு நன்மை என்னவென்றால், நீங்கள் ஜேர்மன் அரசின் கல்வி உதவித்தொகை முதல் குழந்தைகளுக்கான அரசு உதவிகள் வரையான சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை அனுபவிக்கலாம்.
இதில் கவனிக்கவேண்டிய ஒரு விடயமும் உள்ளது. அதாவது நமக்கு ஜேர்மனியில் நிரந்தர வாழிட உரிமம் உள்ளது, அதனால், வேறொரு நாட்டுக்குச் சென்று வாழலாம் என இன்னொரு நாட்டுக்குச் சென்று ஆறு மாதங்களுக்கு மேல் தங்குவீர்கள் என்றால், உங்கள் வாழிட உரிமத்தை இழக்க நேரிடும். நிரந்தர வாழிட உரிமம் என்றாலும் அது வாழ்நாள் முழுவதும் நிரந்தரம் என்று எண்ணி அக்கறையற்று இருந்துவிடக்கூடாது.
நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கான தகுதி என்ன?
பெடரல் புலம்பெயர்தல் அமைச்சக விதிகளின்படி, வாழிட உரிம பெற்று குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் சொந்தக்காலில் நின்று சம்பாதித்து, ஜேர்மன் மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து, ஜேர்மன் மொழியிலும் புலமை பெற்றிருப்பவர்கள் பெரும்பாலும் நிரந்தர வாழிட உரிமம் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
இதுபோக, உங்களிடம் Blue Card இருக்குமானால், நீங்கள் ஜேர்மனியில் 33 மாதங்கள் மட்டுமே வாழ்ந்த நிலையிலும், உங்களுக்கு ஜேர்மன் மொழிப்புலமை இல்லையென்றாலும், உங்களுக்கு நிரந்தர வாழிட உரிமம் கிடைக்கும். அல்லது ஜேர்மன் மொழியில் நீங்கள் B1 levelஇல் தேர்ச்சி பெற்றிருந்தால் 21 மாதங்களிலேயே உங்களுக்கு நிரந்தர வாழிட உரிமம் கிடைக்கும்.
மேலும், ஆராய்ச்சியாளர், சுய தொழில் செய்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சம்பாதிப்பவர்கள், ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள், ஜேர்மனியில் வாழும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் முதலானவர்களும், சில ஆண்டுகளில் நிரந்தர வாழிட உரிமம் பெற வாய்ப்புள்ளது.
ஜேர்மன் குடியுரிமை
அடுத்ததாக ஜேர்மன் குடியுரிமை குறித்து பார்ர்க்கலாம்.
ஜேர்மன் நிரந்தர வாழிட உரிமம் என்பது வெளிநாட்டவரான உங்களை ஜேர்மனியில் குடியமர்த்த உதவும் ஒன்று. ஆனால், ஜேர்மன் குடியுரிமை அப்படியல்ல. அது, உங்களை வெளிநாட்டவர் என்ற நிலையிலிருந்து ஜேர்மன் நாட்டின் குடியுரிமை பெற்றவர் (naturalised)என்ற நிலைக்கு மாற்றும்.
உங்களுக்கு ஜேர்மன் குடியுரிமை இருக்கும் பட்சத்தில், வாக்களிக்கும் உரிமை முதல், ஜேர்மனியில் பிறந்த ஜேர்மன் குடிமக்களுக்கு என்னென்ன உரிமைகள் மற்றும் சலுகைகள் உள்ளனவோ, அவை அனைத்தும் உங்களுக்கும் உரியவையாகிவிடும். அதன் பிறகு நீங்கள் வேறொரு நாட்டுக்குச் சென்று எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தங்கிவிட்டு ஜேர்மனிக்குத் திரும்பலாம், உங்கள் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்காது.
ஜேர்மன் குடியுரிமை பெறுவதற்கான தகுதிகள் என்னென்ன?
ஜேர்மன் குடிமகனாவதற்கு தடைகள் அதிகம்தான். முதலாவது, நீங்கள் குறைந்தது எட்டு ஆண்டுகளாவது ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் (சில விதிவிலக்குகளும் உண்டு).
ஜேர்மானியர் ஒருவரின் கணவர் அல்லது மனைவியாக இருப்பவர்களுக்கு சற்று எளிதில் ஜேர்மன் குடியுரிமை கிடைத்துவிடும். உங்கள் பெற்றோரில் ஒருவர் ஜேர்மன் குடியுரிமை கொண்டவராக இருந்தாலும் உங்களுக்கு குடியுரிமை உண்டு.
நிரந்தர வாழிட உரிமம் கோருவோரைப் போலவே ஜேர்மன் குடியுரிமை கோருவோரும், ஜேர்மன் மொழியில் B1 நிலை மொழிப்புலமை கொண்டவர்களாக இருப்பதும் (German language skills), குடியுரிமைத் தேர்வில் வெற்றி பெறுவதும் அவசியம்.
அத்துடன், நீங்கள் அரசின் உதவியை நாடாமல் சொந்தக்காலில் நிற்பதையும், உங்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் வாழ்வதற்கு ஒரு இடம் ஆகியவை இருப்பதையும் நிரூபிக்கவேண்டும்.