ஜேர்மனியில் களைகட்டும் யூரோ கிண்ணம்... கோடாரியுடன் மிரட்டல் விடுத்த நபர்: அடுத்து நடந்த பகீர் சம்பவம்
ஜேர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் கோடாரியுடன் பொலிசாருக்கு மிரட்டல் விடுத்த நபரை, பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் தரப்பு உறுதி
கோடாரியுடன் மிரட்டல் விடுத்த நபரை சுட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளதுடன், அந்த நபர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய சம்பவமானது நெதர்லாந்து கால்பந்து அணி ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த சம்பவமானது நெதர்லாந்துக்கும் போலந்துக்கும் இடையிலான போட்டியுடன் தொடர்புடையதாகக் கருதப்படவில்லை.
ஹாம்பர்க் பகுதியில் நெதர்லாந்து மற்றும் போலந்து அணிகளுக்கு இடையே யூரோ கிண்ணம் போட்டி முன்னெடுக்கப்பட்டது. தொடக்கத்தில் அந்த நபர் கோடாரி மற்றும் தீக்குளிக்கும் சாதனத்துடன் பொலிஸ் அதிகாரிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இறுதியில் அந்த நபர் மீது pepper spray தூவிய பின்னர் பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முதலுதவி அளிக்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
30,000 நெதர்லாந்து ரசிகர்கள்
ஆனால் இச்சம்பவமானது கால்பந்து தொடர்புடையது அல்ல என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி பகல் 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அந்த நபர் காவல்துறையால் அடையாளம் காணப்படவில்லை என்றும் இந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பிலும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்த பகுதிக்கும் 5 மைல்கள் தொலைவில் யூரோ கிண்ணம் கால்பந்து அரங்கம் அமைந்துள்ளது. மேலும், நெதர்லாந்து மற்றும் போலந்து ஆட்டத்தை கண்டுகளிக்கும் நோக்கில் சுமார் 30,000 நெதர்லாந்து ரசிகர்கள் அந்த நகரில் திரண்டிருந்தனர்.
இதே எண்ணிக்கையிலான போலந்து அணி ரசிகர்களும் காணப்படலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த சம்பவம் போட்டியை பாதிக்கவில்லை என்பதுடன் இருதரப்பு ரசிகர்களும் அமைதி காத்ததாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |