ஜேர்மன் குடியுரிமைக்காக காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி
அடுத்த மாதம், குடியுரிமை தொடர்பில் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது.
இந்த தகவலை ஜேர்மன் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் பலர், தங்கள் நாட்டின் குடியுரிமையையும் தக்கவைத்துக்கொண்டு, ஜேர்மன் குடியுரிமையும் பெறுவதற்காக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி ஒன்று கிடைக்க இருக்கிறது, அதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்...
ஆம், அடுத்த மாதம், அதாவது, டிசம்பரில், இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பது தொடர்பில் விவாதிக்க ஜேர்மன் நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் பலர், ஜேர்மன் குடியுரிமை பெறவேண்டுமானால் தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையை தியாகம் செய்யவேண்டியிருக்கும் என்பதாலேயே ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கு யோசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஜேர்மனியில் புதிதாக ஆட்சிக்கு வந்த கூட்டணி அரசு, குடியுரிமை தொடர்பில் பல நல்ல முடிவுகளை எடுக்க இருப்பதாக தனது தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருந்தது.
தற்போது தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ள அரசு, இரட்டைக் குடியுரிமையை அனுமதித்தல் மற்றும் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான காலகட்டத்தை குறைத்தல் ஆகிய திட்டங்கள் தொடர்பில் நடவடிக்கைகளைத் துவங்க உள்ளது.
அவ்வகையில், ஜேர்மன் குடியுரிமை பெற விரும்புவோர் தங்கள் முந்தைய குடியுரிமையை அல்லது தங்கள் சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்காமலே, ஜேர்மன் குடியுரிமை பெறுவதை, அதாவது இரட்டைக் குடியுரிமை வைத்திருக்க அனுமதியளிப்பதை அனுமதிப்பது தொடர்பில், அடுத்த மாதம் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.