ஜேர்மனி பொதுத்தேர்தல்: அச்சத்தில் ஆசிய புலம்பெயர்ந்தோர்
ஜேர்மனியில், பிப்ரவரி, அதாவது இம்மாதம் 23ஆம் திகதி, பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
சமீப காலமாக ஜேர்மனியில் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சி ஒன்று வேகமாக முன்னேறிவருவதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்தோர், குறிப்பாக ஆசிய புலம்பெயர்ந்தோர் அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
அச்சத்தில் ஆசிய புலம்பெயர்ந்தோர்
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரபல ஜேர்மன் ஊடகம் ஒன்று, வாக்களிப்பு குறித்து ஆசிய புலம்பெயர்ந்தோர் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக அவர்களில் சிலரிடம் பேட்டி எடுத்துள்ளார்கள்.
வீடியோவை காண
புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative für Deutschland (AfD) கட்சி இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறும் நிலையில், அது தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிய புலம்பெயர்ந்தோர் தெரிவிக்கிறார்கள்.
AfD கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறுப்புச் சூழல் ஏற்படலாம் என்றும், அப்படி ஒரு நிலை ஏற்படுமானால், நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் Mijoung Woo என்னும் தென்கொரிய மாணவி.
இந்தியாவிலிருந்து சமீபத்தில்தான் ஜேர்மனிக்கு வந்துள்ளார் ஹர்ஷினி. AfD கட்சியைக் குறித்து அச்சம் உள்ளது என்று கூறும் அவர், ஏனென்றால் அவர்கள் தீவிரக் கொள்கைகள் கொண்டவர்கள் இல்லையா என்கிறார்.
ஆப்கன் நாட்டவரான ஷாசதா கான், தேர்தலில் AfD கட்சி வெற்றி பெறுமானால், அது புலம்பெயர்ந்தோருக்கு, குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிப்பதைத் தூண்டுவதாக அமையலாம் என கருதுவதாக தெரிவிக்கிறார்.
ஐரோப்பிய புலம்பெயர்ந்தோர் வெள்ளையர்களைப்போல இருப்பதால், ஆசிய புலம்பெயர்ந்தோரை விட அவர்கள் நன்றாக நடத்தப்படுவதாகவும் கூறுகிறார் அவர்.
இலங்கையரான சங்கர், தேர்தலில் AfD கட்சி வெற்றி பெறுமானால், புலம்பெயர்ந்தோர் நிலைமை மேலும் மோசமாகலாம் என்கிறார்.
கடந்த காலத்தில் புலம்பெயர்ந்தோருக்கு பெரும் வரவேற்பளித்தது ஜேர்மனி. ஆனால், இப்போது AfD கட்சி பயங்கரமாக முன்னேறி வருகிறது. அது அபாயகரமான விடயமாகும். தேர்தலில் அக்கட்சி வெற்றி பெறுமானால், புலம்பெயர்ந்தோர் நிலைமை மோசமடையலாம் என்னும் அச்சம் உள்ளது என்கிறார் சங்கர்.
ஆக, தேர்தல் முடிவுகள் நடுநிலைமையாக அமையுமானால், எல்லோருக்கும் நல்லது என ஆசிய புலம்பெயர்ந்தோர் கூறுவதுடன், முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைய தலைமுறை அதைச் செய்யும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |