உடனடி பதிலடி... புலம்பெயர்தல் எதிர்ப்பு கட்சியை ஆதரித்தவர்களுக்கு மக்கள் அளித்துள்ள தீர்ப்பு
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றொரு சொல் வழக்கு உண்டு. அதாவது, ஜனநாயகத்தின் வலிமை என்ன என்பதை அது காட்டுகிறது எனலாம்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, ஒவ்வொரு முறை அரசியல் கட்சிகள் புலம்பெயர்தல் எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கும்போதும், ஜேர்மன் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெருக்களில் இறங்குகிறார்கள்.
அரசியல்வாதிகள் புலம்பெயர்தல் எதிர்ப்பு என்னும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிக்கொண்டே இருந்தாலும், தேர்தலில், தாங்கள் எல்லோருமே புலம்பெயர்தலை முற்றிலும் எதிர்ப்பவர்கள் அல்ல என்பதை தொடர்ந்து உறுதி செய்துகொண்டே இருக்கிறார்கள் ஜேர்மன் மக்கள்.
இணைந்த கைகள்
சமீபத்தில், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் புலம்பெயர்தலுக்கெதிராக பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார், வருங்கால சேன்சலர் என எதிர்பார்க்கப்படும் CDU கட்சியின் தலைவரான Friedrich Merz.
புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான Alternative für Deutschland (AfD) கட்சி அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க, ஜேர்மன் வரலாற்றில் முதன்முறையாக வலதுசாரிக் கட்சி ஒன்றின் உதவியுடன் பிரேரணை ஒன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
ஒரு பிரேரணை வெற்றிபெற்றதும், ‘influx limitation law’ என்னும் புலம்பெயர்தல் தொடர்பிலான சட்டம் தொடர்பான மசோதா ஒன்றை அதே CDU கட்சி கொண்டுவந்தது.
முந்தைய மசோதாவுக்கு ஆதரவாக AfD கட்சி வாக்களித்ததுபோலவே, இந்த மசோதாவுக்கும் ஆதரவளிக்க, மற்ற கட்சியினரும் மக்களும், எங்கே இந்த மசோதாவும் வெற்றிபெற்றுவிடுமோ என பதற்றம் அடைந்தார்கள்.
ஆனால், சிறிய வித்தியாசத்தில் influx limitation law மசோதா தோல்வியடைந்துவிட்டது.
இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட CDU கட்சியின் தலைவரான Friedrich Merzக்கு மக்களிடையே ஆதரவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இம்மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி, ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னிலை வகித்த CDU மற்றும் CSU கட்சிகளுக்கான மக்கள் ஆதரவு, 2 புள்ளிகள் குறைந்து 28 சதவிகிதமாகியுள்ளது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஆக, இதுவரை கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகித்துவந்த CDU கட்சிக்கு, மக்கள் ஆதரவு குறைந்துள்ளது.
சரி, பொதுத்தேர்தலில் மக்கள் என்ன முடிவு செய்வார்கள் என்று பார்க்கலாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |