எரிவாயுக் கசிவு என தீயணைப்பு வீரர்களை அழைத்த மக்கள்: பின்னர் தெரியவந்த உண்மை
ஜேர்மன் நகரமொன்றில், எரிவாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்களுக்கு பல அழைப்புகள் வந்துள்ளன.
தீயணைப்பு வீரர்களை அழைத்த மக்கள்
சனிக்கிழமையன்று, ஜேர்மனியின் Wiesbaden நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் எரிவாயு வாசம் வீசுவதாகவும், எரிவாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறி தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன.
உடனே அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், அங்கு எரிவாயுக் கசிவு எதுவும் ஏற்பட்டுள்ளதா என சோதிக்க, அந்தக் கட்டிடத்துக்கு எரிவாயுக் குழாய் இணைப்பே இல்லை என்பது தெரியவந்துள்ளது.
மீண்டும் சனிக்கிழமை மாலை அதே கட்டிடத்திலிருந்து தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு வர, அருகிலிருந்த கட்டிடங்களையும் சோதனையிட்டுள்ளார்கள் அவர்கள்.
அப்போது, அருகிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வைக்கப்படிருந்த துரியன் என்னும் பழமே அந்த வாசத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. அங்குள்ள வென்டிலேஷன் அமைப்பின் மூலம் அந்த வாசம் கட்டிடம் முழுவதும் பரவியதையும் தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பின்னர் மற்றொரு குடியிருப்பிலிருந்து எரிவாயு வாசம் வீசுவதாக தீயணைப்பு வீரர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், அங்கிருந்த ஒரு வீட்டில் துரியன் பழம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அந்த வீட்டில் வசிப்பவர், எரிவாயுக் கசிவு என சந்தேகத்தை ஏற்படுத்திய பல்பொருள் அங்காடியிலிருந்து ஒரு துரியன் பழத்தை தன் வீட்டுக்கு வாங்கி வந்துள்ளார் என்பது பின்னர் தெரியவந்தது.
தெற்காசியாவில் பிரபலமான இந்த துரியன் என்னும் பழம், ஒரு தனித்துவம் வாய்ந்த சுவைகொண்டது. அதே நேரத்தில், அதன் ஒரு மாதிரியான கடும் வாசம் காரணமாக விமான நிலையங்கள், பொதுப்போக்குவரத்து மற்றும் ஹோட்டல்களில் துரியன் பழங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |