அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமைச்சர்: ஜேர்மன் ஆளும் கூட்டணிக்குள் பிளவு
சிரிய அகதிகள் விடயத்தால் ஜேர்மனியின் ஆளும் கூட்டணிக்குள் கருத்துவேறுபாடு உருவாகியுள்ளது.
அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள அமைச்சர்
பல நாடுகளில், நாட்டை ஆளப்போவது யார் என்னும் விடயத்தை நிர்ணயிக்கும் ஒரு விடயமாக புலம்பெயர்தல் ஆகிவிட்டது.

புலம்பெயர்ந்தோரால் தொல்லை என சில அரசியல்வாதிகள் கருத்துக்களைப் பரப்பை, அதற்கேற்றாற்போல் சில அகதிகள் தாக்குதல் நடத்த, மக்கள் மனநிலையும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பிவருகிறது.
ஜேர்மனியைப் பொருத்தவரை, வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) புலம்பெயர்தலைக் கடுமையாக எதிர்த்து நிற்பதால், மக்களிடையே அக்கட்சிக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது.
ஆக, எங்கே அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடுமோ என பயந்து ஆளும் கட்சியும் மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அவ்வகையில், திங்கட்கிழமையன்று, ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ், சிரியாவில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது, ஆகவே, இனி சிரியா நாட்டவர்களுக்கு புகலிடம் வழங்கத் தேவையில்லை, அதனால் சிரிய அகதிகளை சிரியாவுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளைத் துவங்கலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால், சமீபத்தில் சிரியாவுக்கு சென்று திரும்பிய ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜோஹன் (Johann Wadephul), சிரிய அகதிகள் பாதுகாப்பாக சிரியாவுக்குத் திரும்ப முடியாது என்று கூறியுள்ளார்.
அங்கு யாரும் கண்ணியத்துடன் வாழ முடியாது என்றும் கூறியுள்ளார் ஜோஹன். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய ஜோஹன், போருக்குப் பிந்தைய ஜேர்மனியைவிட சிரியா மோசமாக காணப்படுவதாகவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.
ஆகவே, Christian Democratic Union (CDU) கட்சிக்குள்ளேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியில், சுமார் 950,000 சிரிய புலம்பெயர்ந்தோர் வாழ்கிறார்கள். அவர்களில் பலர் ஜேர்மன் குடியுரிமையே பெற்றுவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |