ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல்... எல்லைகள் மூடப்படும்: ஜேர்மனியின் வருங்கால தலைவர் உறுதி
ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் ஜேர்மன் அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல்...
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Aschaffenburg நகரில் அமைந்துள்ள மழலையர் பள்ளி ஒன்றைக் குறிவைத்து 28 வயதான ஆப்கன் நாட்டவரான புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தாக்குதல் நடத்தினார்.
அவர் கத்தியால் குத்தியதில் இரண்டு வயது குழந்தை ஒன்றும், 41 வயது ஆண் ஒருவரும் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்துள்ளனர்.
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
ஜேர்மன் அரசியலில் எப்போதுமே புலம்பெயர்தல் முக்கிய பிரச்சினையாக கருதப்படும்.
ஏற்கனவே கிறிஸ்துமஸ் சந்தையில் Taleb Al-Abdulmohsen என்னும் சவுதி அரேபிய நாட்டவர் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்ததும் அரசியலாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் தாக்குதல் நடத்தியுள்ளதால், ஜேர்மன் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அடுத்து ஜேர்மன் சேன்ஸலராக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என நம்பப்படும் Friedrich Merz, தான் தேர்தலில் வெற்றிபெற்றால், கடுமையான எல்லை மற்றும் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
அனைத்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கும் ஜேர்மன் எல்லை மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தவறாக வழிநடத்தப்பட்ட 10 ஆண்டுகால புகலிட மற்றும் புலம்பெயர்தல் கொள்கைகளால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்டுவருகிறோம் என்று கூறிய Merz, அவற்றை முடிவுக்குக் கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |