தூக்கத்தில் இருந்த இளம்பெண் கொடூர கொலை... சூரிச் பொலிசாரிடம் சரணடைந்த ஜேர்மானியர்
சுவிட்சர்லாந்தில் தூக்கத்தில் இருந்த முன்னாள் காதலியை கொடூரமாக கொலை செய்துவிட்டு சூரிச் பொலிசாரிடம் சரணடைந்த ஜேர்மானியர் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஹார்ஜன் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில் குறித்த ஜேர்மானியருக்கு 15 ஆண்டுகள் சிறையும், 12 ஆண்டுகளுக்கு நாட்டில் இருந்து வெளியேற்றுவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக 160,000 பிராங்குகள் தொகை அளிக்கவும் தீர்ப்பாகியுள்ளது.
குற்றவாளியான ஜேர்மானியர் திட்டமிட்டு இந்த படுகொலையை செய்யவில்லை எனவும், ஆனால் உடனே அந்த முடிவை அவர் எடுத்துக்கொண்டார் எனவும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
குற்றவாளியின் கண்மூடித்தனமான தாக்குதலை தடுத்து, தப்பிக்க முடியாமல் பாதிக்கப்பட்டவர் ஸ்தம்பித்துப் போனார் எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பவம் நடந்த 2019, ஜூலை மாதம் 35 வயதான குறித்த ஜேர்மானியர் தூக்கத்தில் இருக்கும் தமது முன்னாள் காதலியை காண நேர்ந்ததுடன், அந்த 24 வயது பெண்ணை மது போத்தலால் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
பின்னர் கழுத்தை நெரித்து, அவர் சுயநினைவற்று சரிந்த நிலையில், மார்பில் ஆறு முறை கத்தியால் குத்தியுள்ளார். பிறகு, விட்டுப்பிரிவதாக கூறி கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துவிட்டு, நேரே சூரிச் பொலிசாரிடம் சென்று சரணடைந்துள்ளார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு, குறித்த ஜேர்மானியருக்கு ஆயுள் தண்டனை கோரியுள்ளது. ஆனால் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.