கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஜேர்மன் நிதி அமைச்சகம்: வெளியான பின்னணி
ஜேர்மனியில் கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நிதி அமைச்சகத்தின் தேவையற்ற விளம்பர செலவுகள் தொடர்பில் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் நிதி அமைச்சராக செயல்பட்டு வருபவர் Olaf Scholz. வரவிருக்கும் செப்டம்பர் பொதுத் தேர்தலில் சேன்ஸலருக்கான வேட்பாளராக போட்டியிடுகிறார் இவர்.
இந்த நிலையில் தமது அமைச்சகம் தொடர்பான விளம்பரங்களுக்காக இவர் அதிக தொகை செலவிடுவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி கடந்த ஓராண்டில் மட்டும் விளம்பரங்களுக்கான நிதியை இரட்டிப்பாக்கியதும் அரசு தரவுகளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2018-ல் ஜேர்மன் நிதி அமைச்சகம் விளம்பரங்களுக்காக 2.3 மில்லியன் யூரோ தொகையை செலவிட்டுள்ளது.
ஆனால் 2019-ல் இந்த தொகையானது 4.8 மில்லியன் யூரோ என அதிகரித்துள்ளது. மட்டுமின்றி 2020-ல் விளம்பரங்களுக்காக மட்டும் 5.8 மில்லியன் யூரோ தொகையை செலவிட திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
2009 முதல் 2020 வரையான காலகட்டத்தில் ஜேர்மன் நிதி அமைச்சரகம் விளம்பரங்களுக்காக மட்டும் 34.69 மில்லியன் யூரோ அளவுக்கு தொகையை செலவிட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் ஜேர்மன் போக்குவரத்து அமைச்சரகம் விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை 11.45 மில்லியன் யூரோ.
ஆனால் தங்கள் மீதான விமர்சனங்களை நியாயப்படுத்தியுள்ள நிதி அமைச்சரகம், போட்டிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில் முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற விளம்பரங்கள் தேவை என தெரிவித்துள்ளது.
இதனிடையே, தொடர்ச்சியான கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளால் ஜேர்மனியின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கக்கூடும், இது மொத்தமான திவால்நிலைக்கு வழிவகுக்கும் மற்றும் வேலையின்மை உயரும் என்று நிபுணர்கள் பலமுறை எச்சரித்துள்ளது குறிபிடத்தக்கது.