சில பணியாளர்களுக்கு 550 யூரோக்கள் வரை கோவிட் போனஸ் வழங்க ஜேர்மனி திட்டம்
கோவிட் சூழலின் மத்தியிலும் வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் பணியைச் செய்த முதியோர் இல்லங்களில் பணி செய்யும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க ஜேர்மன் அரசு திட்டமிட்டு வருகிறது.
முதியோர் இல்லங்களில் முழு நேரம் பணி செய்யும் பணியாளர்களுக்கு இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் 550 யூரோக்கள் வரை போனஸ் வழங்க இருப்பதாக சுகாதாரத்துறையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
நர்ஸிங் ஹோம்களிலும் முதியோர் இல்லங்களிலும் பெருந்தொற்று காலகட்டத்தின்போது சிறப்பாக பணி செய்த செவிலியர்களுக்கு இந்த போனஸ் கிடைக்கும் என தெரிகிறது.
இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbachம் உறுதி செய்துள்ளார்.
2020 நவம்பர் 1க்கும், 2022 ஜூன் 30க்கும் இடையில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது வயதானவர்களை கவனித்துக்கொள்ளும் பிரிவில் பணியாற்றியவர்கள், ஜூன் 30, 2022 அன்றும் பணியிலிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு இந்த போனஸ் கிடைக்கும்.
அதிகபட்சமாக அவர்களுக்கு 550 யூரோக்கள் வரை போனஸாக கிடைக்கும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிர்வாகிகள், சமையல் அறை பணியாளர்கள், சுத்தம் செய்பவர்கள், ரிசப்ஷன், தோட்டவேலை, துணி துவைத்தல் மற்றும் செக்யூரிட்டி பணியாற்றியவர்கள், குறைந்தபட்சம் 25 சதவிகிதம் கோவிட் நோயாளிகளுக்காக பணி செய்திருந்தால் அவர்களுக்கு 370 யூரோக்கள் வரையும்,
முதியோர் இல்லங்களில் பயிற்சி பெறுவோராக இருந்தவர்களுக்கு 330 யூரோக்கள் வரையும், மற்ற பணியாளர்களுக்கு 190 யூரோக்கள் வரையும், தன்னார்வலர் திட்டத்தின் கீழ் சேவை செய்தோருக்கு 60 யூரோக்கள் வரையும் கிடைக்கும்.
முதியோர் இல்லங்களிலும் மருத்துவமனைகளிலும் பணியாற்றிய செவிலியர்களுக்கான போனஸாக, அரசு 1 பில்லியன் யூரோக்களை ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.