கழிவறைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுக்கச் சென்றபோது சிக்கிய ஜேர்மன் வீரர்: அகதியாக இரட்டை வாழ்க்கை
ஒரு சிரிய அகதியாக இரட்டை வாழ்க்கை வாழ்ந்துவந்த ஜேர்மன் இராணுவ வீரர் ஒருவர், கழிவறைக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுக்கச் சென்றபோது வசமாக சிக்கினார்.
விசாரணையில், Lt Franco என்ற அந்த இராணுவ வீரர், David Benjamin என்ற பெயரில் ஒரு சிரிய நாட்டு அகதியாக தன்னைப் பதிவு செய்துகொண்டு இரட்டை வாழ்க்கை வாழ்ந்துவந்தது தெரியவந்தது. அவர், ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas, துணை சபாநாயகர் மற்றும் ஒரு யூத சமூக ஆர்வலர் ஆகியோரைக் கொன்றுவிட்டு, ஒரு இஸ்லாமியர் அவர்களை கொன்றதாக போலியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கெதிரான பிரச்சினையை உருவாக்க திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்கள்.
அத்துடன் அவரது பெற்றோர் வீட்டில் ஏராளம் ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் அவர் மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், Franco தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
ஜேர்மன் புகலிட அமைப்பில் உள்ள ஓட்டைகளை வெளிப்படுத்துவதற்காகவே தான் ஒரு அகதியாக பதிவு செய்துகொண்டதாகவும், தன் பெற்றோரின் பாதுகாப்புக்காகவே ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
தான் ஆஸ்திரிய பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி ஒன்றிற்கு சென்றபோது ஒரு துப்பாக்கியைக் கண்டெடுத்ததாகவும், ஆனால் விமானம் ஏறவேண்டியிருந்ததால் பயந்து அதை கழிவறையில் ஒளித்துவைத்துவிட்டதாகவும், மீண்டும் அதை எடுக்கச் செல்லும்போது சிக்கிக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவர் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.