இருவர் கொல்லப்பட்ட ஜேர்மன் கத்திக்குத்து சம்பவம்: ஆசிய நாட்டவர் கைது
ஜேர்மனியின் அஷாஃபென்பர்க் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மழலையர் பள்ளி குழு
குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை மற்றும் மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர் தெரிவித்தனர்.
கைதான அந்த 28 வயது ஆப்கான் நபர் பூங்காவில் உள்ள ஒரு மழலையர் பள்ளி குழுவை சமையலறை கத்தியால் வேண்டுமென்றே தாக்கியதாக பவேரிய உள்விவகார அமைச்சர் ஜோச்சிம் ஹெர்மன் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 41 வயதுடைய ஒரு வழிப்போக்கர், ஒரு ஜேர்மானியர் மற்றும் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர், அதே நேரத்தில் இரண்டு வயது சிரியா நாட்டவரான சிறுமி ஒருவர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த பூங்காவிலே தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 61 வயது முதியவர், ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆசிரியர் உட்பட மேலும் மூவர் காயமடைந்ததாக பவேரிய சுகாதார அமைச்சர் ஜூடித் கெர்லாச் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வன்முறை நடத்தை பின்னணியைக் கொண்ட அந்த நபர் உளவியல் சிகிச்சையில் இருந்து வந்தார் என்றும், புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், டிசம்பரில் தானாக முன்வந்து ஜேர்மனியை விட்டு வெளியேறுவதாகக் கூறியுள்ளார் எனவும் தகவல் வெளியானது.
தொடர்ச்சியான வன்முறை
ஆனால் சிகிச்சை காரணமாக அவர் வெளியேறவில்லை என உள்விவகார அமைச்சர் ஜோச்சிம் ஹெர்மன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பிப்ரவரி 23 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,
பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வு குறித்த கவலைகள் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள ஜேர்மனியில் தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் தற்போது இந்தக் கத்திக்குத்துத் தாக்குதலும் விவாதங்களை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
டிசம்பர் 20 ஆம் திகதி, மாக்ட்பர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடந்து சென்ற மக்கள் மீது சவுதி அரேபிய மருத்துவர் ஒருவர் காரை மோதியதில் ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 200 பேர் காயங்களுடன் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |