சரக்குக் கப்பல்கள் மீது மோதிய பிரம்மாண்ட கப்பல்: பொலிசார் விசாரணை
German police probe cruise ship captain after collision: ஜேர்மனியில், பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பல்கள் மீது மோதிய விடயம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
ஜேர்மனியிலுள்ள Bremerhaven என்னுமிடத்திலுள்ள துறைமுகத்தில் பயணிகள் கப்பல் ஒன்றும், சரக்குக் கப்பல்கள் இரண்டும் நின்றுகொண்டிருந்துள்ளன.

மூன்று கப்பல்கள் மோதி விபத்து
Mein Schiff 3 என்னும் அந்த ஆடம்பரக் கப்பலில் 2,428 பயணிகளும் 922 பணியாளர்களும் இருந்துள்ளார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, பலத்த காற்று வீசியதில், அந்த பயணிகள் கப்பல், நின்றுகொண்டிருந்த இரண்டு சரக்குக் கப்பல்கள் மீது மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் மூன்று கப்பல்களும் சேதமடைந்துள்ளன. பயணிகள் கப்பல் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ள நிலையில், சரக்குக் கப்பல்களில் ஒன்று கடுமையாக சேதமடைந்துள்ளது. என்றாலும், பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து படகுத்துறையும் சேதமடைந்துள்ளது. பல மில்லியன் இழப்புடன், பல நாட்களுக்கு மற்ற பயணிகள் கப்பல்கள் புறப்படுவதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டதா என்பது போன்ற விடயங்கள் தொடர்பில், பயணிகள் கப்பல் கேப்டனை அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்திவருகிறார்கள்.