ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும்... பிரித்தானியாவைத் தொடர்ந்து இந்த நாடு கோரிக்கை விடுத்ததால் அதிர்ச்சி
பிரித்தானியாவைத் தொடர்ந்து தாங்களும் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறவேண்டும் என ஜேர்மனியின் முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் கொரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவைப்போல ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டுமென்ற கோரிக்கை ஜேர்மனியிலிருந்து வந்திருப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. AfD கட்சி உறுப்பினர்களான 600 பேர் கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி Dresdenஇல் சந்தித்துள்ளனர். தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்காக அவர்கள் Dresdenஇல் கூடியுள்ளார்கள்.
ஜேர்மனி சகஜ நிலைக்கு திரும்பவேண்டும் என்ற கோஷங்களுடன் கூடிய கட்சியினர், மாஸ்க் அணிவதை மறுப்பது முதல் பொதுமுடக்க கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவருவது வரை பல விடயங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஜேர்மனி கொரோனாவின் மூன்றாவது அலையை சமாளிக்க தடுமாறிவரும் நிலையில், பலரும் கட்டுப்பாடுகளை வரவேற்றுள்ளார்கள்.
ஆனால், AfD கட்சியினர் மட்டும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தங்கள் தேர்தல் அறிக்கையில் AfD கட்சியினர் குறிப்பிட்டுள்ள மற்றொரு முக்கிய விடயம், DEXIT. அதாவது, பிரித்தானியாவைப் போல, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறி புதியதொரு ஐரோப்பிய சமுதாயம், பொருளாதாரம் மற்றும் கொள்கைகளை உருவாக்கவேண்டும் என AfD கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
ஆனால், ஜேர்மனியிலுள்ள மற்ற எந்த கட்சியும், AfD கட்சியினருக்கு இந்த விடயத்தில் ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.