உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய இராணுவ வாகனங்களில் ஜேர்மன் உதிரி பாகங்கள்: விசாரணை துவக்கம்
ஜேர்மன் நிறுவனமான Bosch, தடையை மீறி ரஷ்யாவுக்கு இரட்டை உபயோகப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதா என்பதை அறிவதற்காக, ஜேர்மன் பொருளாதார அமைச்சகம் அந்நிறுவனம் மீது விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளது.
2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரீமியாவை தன்னுடன் சேர்த்துக்கொண்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் இரட்டை உபயோக பொருட்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து மேலும் பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சாதாரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் கருவிகளில் பயன்படுத்தக்கூடிய அதே உதிரி பாகங்கள் சில, இராணுவ ஆயுதங்களிலும் பயன்படுத்தப்படலாம். அவை இரட்டை உபயோக பொருட்கள் என அழைக்கப்படுகின்றன.
நடந்தது என்னவென்றால், ஜேர்மன் ஊடகங்கள் சில, உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba, போருக்காக உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்ய இராணுவ வாகனங்களில், Bosch நிறுவன பாகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.
எனவே, அவரது குற்றச்சாட்டை சீரியஸாக எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ள Bosch நிறுவனம், அது தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. தாங்கள் இராணுவ வாகன தயாரிப்பு நிறுவனத்துக்கு எந்த பொருளையும் நேரடியாக விநியோகிக்கவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
Bosch நிறுவனம், ரஷ்யாவிலுள்ள தனது கிளை நிறுவனத்தில் 3,500 பேரை பணிக்கமர்த்தியுள்ளது. அங்கு, நுகர்வோர் தயாரிப்புகள், வாகன உதிரி பாகங்கள் முதலான பொருட்கள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.