நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்... ஜேர்மன் முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது விவகாரம்
German spy scandal threatens national security: ஜேர்மன் முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
ஜேர்மனியின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஜேர்மன் முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது
1998ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை, ஜேர்மனியின் வெளிவிவகாரங்களுக்கான உளவுத்துறைத் தலைவராக பொறுப்பு வகித்தவர் ஆகஸ்ட் ஹேன்னிங்.

இந்நிலையில், சமீபத்தில் ஹேன்னிங்கும், அவரது கூட்டாளியான மேன்ஃப்ரெட் (Manfred D) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இருவரிடமும் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையில், ஹேன்னிங்கின் கீழ் வேலை செய்துவந்த மேன்ஃப்ரெட், ஹேன்னிங் 7 ஆண்டுகள் பணி செய்து பணி ஓய்வு பெற்ற பின்பும், தொடர்ந்து 12 ஆண்டுகளாக, சுமார் 2,000 ரகசிய ஆவணங்களை ஹேன்னிங்குக்கு விற்றுவந்துள்ளது தெரியவந்துள்ளது.
அவை, வாரந்தோறும் ஜேர்மன் அரசுக்கு உளவுத்துறை அளிக்கும் உளவுத்துறை ரகசியங்களாகும்.
அவற்றில், வெளிநாட்டு உளவுத்துறை ஏஜன்சிகள் ஜேர்மனிக்கு அனுப்பும் தகவல்களும் அடங்கும்!
குறிப்பாக, ஈரானின் அணுசக்தித் திட்டம், ரஷ்ய ராணுவம் மற்றும் உக்ரைன் போர் தொடர்பான விடயங்களும் அவற்றில் அடங்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்...
கடந்த காலங்களில், ஜேர்மனியில் வாழும் இஸ்லாமியவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் குறித்து அமெரிக்கா ஜேர்மனிக்கு உளவுத்துறை தகவல்களை அனுப்பியுள்ளது.

அதன் அடிப்படையில் ஜேர்மனியில் தீவிரவாதத் தாக்குதல்கள் தடுக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்திருக்கலாம்.
ஆக, இப்போது ஜேர்மன் உளவுத்துறை ரகசியங்களை ஒருவர் ரகசியமாக வாங்கியிருக்கிறார் என்றால், அவர் அதை யாருக்கு வேண்டுமானாலும் விற்கக்கூடும்.
அந்த ரகசியங்கள் சீனாவையோ அல்லது ரஷ்யாவையோ கூட சென்றடையலாம்.
அப்படியிருக்கும் நிலையில், ஜேர்மன் முன்னாள் உளவுத்துறைத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் உலகத்துக்குத் தெரியவந்துள்ளதால், அந்நாடுகள் ஜேர்மனி மீதான நம்பிக்கையை இழக்கக்கூடும்.
ஆகவே, இனி அமெரிக்கா போன்ற நாடுகள், தங்களுக்குக் கிடைத்த உளவுத்துறை ரகசியங்களை ஜேர்மனிக்குக் கொடுக்காமல் போகலாம். அதனால் ஜேர்மனிக்கு இழப்பு!
ஆக மொத்தத்தில், இந்த விடயம் ஜேர்மனியின் தேசிய பாதுகாப்புக்கே பாதகமாக அமையலாம் என எச்சரிக்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.