ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்: மீண்டும் கவலையை ஏற்படுத்தும் ஒரு தகவல்
பல ஆயிரம் கிலோ எடையுள்ள திமிங்கலம் ஒன்று ஜேர்மன் கடற்கரை ஒன்றில் ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்ட விடயம் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு கவலையை உருவாக்கியது.
ஜேர்மன் கடற்கரையில் சிக்கியிருந்த திமிங்கலம்
திங்கட்கிழமையன்று, ஜேர்மனியின் Schleswig-Holstein மாகாணத்திலுள்ள Niendorf என்னுமிடத்திலுள்ள கடற்கரையில், humpback whale வகை திமிங்கலம் ஒன்று ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்டுள்ளதை மக்கள் கவனித்துள்ளனர்.
உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், அதன் உடலில் சுற்றியிருந்த வலையை அறுத்தெறிந்துள்ளனர்.

பின் மெல்ல அதன் தலைப்பகுதியை கடலை நோக்கித் திருப்பி, அது எப்படியாவது கடலை நோக்கி நீந்திச் சென்றுவிடுமா என அவர்கள் காத்திருக்க, அந்த திமிங்கலமோ மீண்டும் கரையைப் பார்த்து திரும்பியது.
32 அடி நீளமுடைய, பல ஆயிரம் கிலோ எடை கொண்ட அந்த திமிங்கலத்தை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாது, ஏனென்றால், அப்படிச் செய்வது அதற்கு காயத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், மீட்புக் குழுவினர், அந்த திமிங்கலத்தின் அருகில் வேகமாக படகுகளை செலுத்துவதன் மூலம் அலைகளை உருவாக்குவது முதலான பல்வேறு விடயங்கள் மூலம் அதை கடலுக்குள் திருப்பி அனுப்ப முயன்றுவந்தார்கள்.
ஆனால், அதனால் பலன் எதுவும் கிடைக்காததால் மீட்புக்குழுவினர் கவலையடைந்தார்கள்.
ஒரு நல்ல செய்தி
இந்நிலையில், வியாழக்கிழமை, பெரிய இயந்திரங்கள் மூலம், கடற்கரையிலிருந்து கடலுக்குள் செல்லும் ஒரு வாய்க்காலை உருவாக்கினார்கள் மீட்புக் குழுவினர்.
அதைத் தொடர்ந்து, ஆச்சரியமளிக்கும் வகையில், அந்த திமிங்கலம் மெல்ல அந்த வாய்க்கால் வழியாக நகரத் துவங்கியது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, அந்த திமிங்கலம், Lübeck வளைகுடா பகுதியில் நீந்திக்கொண்டிருந்துள்ளது.
மீண்டும் கவலையை ஏற்படுத்தும் ஒரு தகவல்
ஆனால், தற்போது மீண்டும் அந்த திமிஙகலம் Wismar என்னும் நகருக்கருகே ஆழமற்ற நீரில் சிக்கிக்கொண்டுள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, அந்த திமிங்கலம் தன்னால் நீந்திச் செல்ல இயலும் அளவிலான தண்ணீரில் இருந்த நிலையிலும், அது ஆழமான இடத்துக்கு நீந்திச் செல்ல முயற்சிக்கவில்லையாம்.
ஆக, இனி அந்த திமிங்கலம் தானே நீந்திச் செல்ல அனுமதிக்கும் வகையில் அதை அப்படியே விட்டு விடுவதுதான் நல்லது என நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
அங்கு ஒரு திமிங்கலம் சிக்கிக்கொண்டிருப்பதால், அந்த இடத்தைச் சுற்றியுள்ள 500 மீற்றர் சுற்றளவைத் தவிர்க்குமாறு அந்த வழியாக வரும் கப்பல்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுவருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |