நவீன கருவி ஒன்றின் உதவியுடன் பேசிய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஜேர்மானியர்: முதலில் என்ன கேட்டிருக்கிறார் பாருங்கள்
ஜேர்மனியில், கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேசும் திறனை இழந்த ஒருவருக்கு மூளையில் கருவி ஒன்று பொருத்தப்பட்டது.
அந்த கருவி பொருத்தப்பட்டதைத் தொடர்ந்து மெதுவாக பேசத் துவங்கியுள்ள அந்த 36 வயது நபர் முதலில் கேட்ட விடயங்களில் ஒன்று என்ன தெரியுமா?
தனக்கு பீர் வேண்டும் என்று கேட்டாராம் அவர்...
2019ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், amyotrophic lateral sclerosis (ALS) என்னும் அபூர்வ வியாதியால் பாதிக்கப்பட்டார் அவர். அவரால் தன்னைச் சுற்றி நடப்பதைப் பார்க்க முடியும், கேட்க முடியும், ஆனால், அவரால் அதற்கு பதில் நடவடிக்கை ஒன்றும் செய்ய முடியாது, அதாவது பதில் சொல்லவோ, கண்கள் முதற்கொண்டு உடலின் எந்த பாகங்களையும் அசைக்கவோ முடியாது. கோமா போன்ற அந்த நிலை pseudocoma என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவர்கள் அவரது மூளையில் கருவி ஒன்றைப் பொருத்தினார்கள். முதல் இரண்டு மாதங்களுக்கு, தன் உடல் பாகங்களை அசைப்பது குறித்து எண்ணுமாறு அவர்கள் அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
பின்னர், மெல்ல மெல்ல, தங்கள் கேள்விகளுக்கு, ஆம், இல்லை என்ற பதில்களை யோசிக்க அவரைப் பழக்கினார்கள்.
அதைத் தொடர்ந்து வார்த்தைகளை வெளிப்படுத்தும் முயற்சியைத் தொடங்கிய அவர்கள், ஒரு நேரத்துக்கு ஒரு எழுத்தை வெளிப்படுத்த அவரைப் பழக்கப்படுத்தினார்கள். அவர் யோசிக்கும் எழுத்தை, கணினி ஒன்றுடன் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர் வாயிலாக அவராலும், மற்றவர்களாலும் கேட்க முடியும்.
மூன்றரை மாதப் பயிற்சிக்குப் பின், சிறிய வார்த்தைகளை வெளிப்படுத்தக் கற்றுக்கொண்ட அவர், தனது பெயரையும் தன் குடும்பத்தினர் பெயர்களையும்எழுத்துக்கூட்டிச் சொல்ல கற்றுக்கொண்டார். அடுத்து, தனக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கும் உதவியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார் அவர்.
அப்படியே மெதுவாகப் ’பேசிப்பேசி’ ஒரு கட்டத்தில் தனக்கு ஒரு பீர் வேண்டும் என்று கேட்டாராம் அவர். அவரால் சாப்பிடவோ, குடிக்கவோ முடியாது என்பதால், மூக்கில் பொருத்தப்பட்டுள்ள குழாய் வழியாகவாவது தனக்கு பீர் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.
பிறகு, தன் நான்கு வயது மகனிடம் ’ஐ லவ் மை கூல் சன்’ என்று கூறிய அவர், இருவரும் சேர்ந்து டிஸ்னி திரைப்படம் பார்க்கலாமா என்று அவனிடம் கேட்டிருக்கிறார்.
விடயம் என்னவென்றால், இவருக்கு பொருத்தப்பட்டுள்ள இந்த கருவி முழுமையாக வெற்றியடையும் பட்சத்தில், இவரைப்போலவே amyotrophic lateral sclerosis (ALS) பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கு அது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதுதான்!