உனக்கு நரக வாழ்க்கை துவங்கிவிட்டது... மகனுடன் வெளிநாட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஜேர்மானியர் பிரித்தானிய மனைவிக்கு விடுத்த மிரட்டல்
போர்ச்சுகல் நாட்டில் வாழ்ந்து வந்த பிரித்தானியப் பெண்ணின் மகனும் கணவரும் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணுக்கு அவர் விடுத்த மிரட்டல்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணவரைப் பிரிந்த பிரித்தானிய பிரபலமான Phoebe Arnold தன் மூன்று வயது மகனான Tassoவுடன் போர்ச்சுகல்லில் வாழ்ந்துவந்த நிலையில், அவரது முன்னாள் கணவரான Clemens Weisshaar (40) தன் மகனை தன்னுடன் அனுப்புமாறும், நவம்பர் 1 அன்று அவனைத் திரும்ப அழைத்து வருவதாகவும் கூறி அவனை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், அவர் சொன்னபடி மகனை அழைத்துவராததால், மகனைக் காணவில்லை என பொலிசாரிடம் புகாரளித்திருக்கிறார் அந்த பெண்.
பொலிசார் அவர்கள் இருவரையும் தேடிவந்த நிலையில், எரிந்த நிலையிலிருந்த கார் ஒன்றிற்குள் Tassoவும், சற்றுத் தொலைவில் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில் Clemensம் உயிரிழந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மகனைப் பிரிய மனதில்லாத Clemens, அவனைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிசார் நம்புவதாக தெரிவித்திருந்தார்கள்.’
இந்நிலையில், மகனை அழைத்துச் சென்ற Clemens, தன் முன்னாள் மனைவி Phoebeக்கு மிரட்டல் விடுத்தது தற்போது தெரியவந்துள்ளது.
நீ மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ வராவிட்டால், நம் மகனைக் கொலை செய்துவிடுவேன் என்றும், உன் நரக வாழ்க்கை துவங்கி விட்டது என்றும் Phoebeக்கு மிரட்டல் செய்திகள் அனுப்பியுள்ளார் Clemens.
அத்துடன், தம்பதியர் சேர்ந்து வாழ்ந்தபோது அவர்கள் வீட்டில் வேலை செய்த ஒரு பெண், பலமுறை Clemens, தன் மனைவி Phoebeஐத் தாக்கியதைக் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இப்போதுதான் Phoebe, Clemens தனக்கு அனுப்பிய செய்திகளை பொலிசாரிடம் காட்டியிருக்கிறார்.
ஆனால், இப்போது மிகவும் காலதாமதமாகிவிட்டது. Clemens, தான் சொன்னதுபோலவே, மகனை தாயிடமிருந்து பிரித்து, அவரது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்!