ஜேர்மனியின் 2027 பட்ஜெட்டுக்கு ஒப்புதல் - 561 பில்லியன் யூரோ செலவுத் திட்டம்
Germany Approves 561 Billion Euro Budget for 2027: ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜேர்மனி, 2027-ஆம் ஆண்டுக்கான தனது பட்ஜெட்டுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
561 பில்லியன் யூரோ செலவுத் திட்டம்
இந்தப் பட்ஜெட்டில் மொத்தம் 561 பில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.59 லட்சம் கோடி) செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பு, ராணுவம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

210.4 பில்லியன் யூரோ கடன் பெற திட்டம்
இந்தப் பட்ஜெட்டின் முக்கிய அம்சம், புதிய கடன் பெறுவதற்கான திட்டமாகும். இதன்படி, 2027-ஆம் ஆண்டில் ஜேர்மனி மொத்தம் 210.4 பில்லியன் யூரோக்களைப் புதிய கடனாகப் பெறத் திட்டமிட்டுள்ளது.
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அந்நாடு பெறும் இரண்டாவது மிகப்பெரிய கடன் தொகையாகும். கொரோனா பெருந்தொற்று காலமான 2021-ஆம் ஆண்டில் பெறப்பட்ட 215.4 பில்லியன் யூரோ கடனே இதுவரை அதிகபட்சமாக உள்ளது.
புதிய கடன் தொகையில் 123 பில்லியன் யூரோக்கள் அரசின் வழக்கமான பட்ஜெட் மூலமாகப் பெறப்பட உள்ளது. மீதமுள்ள தொகை உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் துறைக்கான சிறப்பு நிதி ஏற்பாடுகள் மூலம் திரட்டப்பட உள்ளது. மேலும், 62 பில்லியன் யூரோக்கள் முதலீட்டுச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜேர்மன் சேன்சலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கூட்டணி அரசு, நாட்டின் போக்குவரத்து வசதிகள், ஆராய்ச்சி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது. பல ஆண்டுகளாக போதிய முதலீடு இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்துவதும் முக்கிய நோக்கமாக உள்ளது.
முக்கிய முடிவுகள்
இதற்கிடையே, பட்ஜெட் பேச்சுவார்த்தைகளில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பேக்கேஜிங் மீதான புதிய வரி திட்டம் கைவிடப்பட்டுள்ளது. சர்க்கரை கலந்த பானங்கள் மீதான வரி 2028-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மின்சார வரியைக் குறைக்கும் திட்டமும் தள்ளிப்போடப்பட்டுள்ளது. மேலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவிகளைக் குறைக்கும் முடிவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்தப் பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்துள்ளன. அதிக கடன் பெறுவது எதிர்காலத்தில் நாட்டின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என அவை எச்சரித்துள்ளன. இருப்பினும், பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சமூக நலனை ஒருங்கிணைத்து முன்னெடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது.
இறுதி ஒப்புதல்?
தற்போது பட்ஜெட் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இறுதி ஒப்புதலுக்காக நவம்பர் 24 முதல் 27-ஆம் திகதி வரை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இது விவாதிக்கப்பட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |