கடும் எதிர்ப்பின் மத்தியில்... ரூ 850 கோடிக்கு ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அனுப்பிய ஐரோப்பிய நாடு
கடந்த 3 மாதங்களில் மட்டும் 101 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகைக்கு ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய ஜேர்மனி அனுமதி அளித்துள்ளது.
காஸாவில் அப்பாவி மக்கள் மீது
ஜேர்மனி வெளிவிவகார அமைச்சகத்தின் தரவுகளின் இருந்து தொடர்புடைய தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜேர்மனியில் இருந்து ஏற்றுமதியாகும் ஆபத்தான ஆயுதங்கள் காஸாவில் அப்பாவி மக்கள் மீது பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டு மனித உரிமைகள் ஆர்வலர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கும் நிலையிலேயே ஆயுத ஏற்றுமதி தொடர்பிலான தகவல் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த 3 மாதங்களில் 101.61 மில்லியன் டொலர் மதிப்பிலான, (இந்திய பண மதிப்பில் சுமார் 850 கோடி ரூபாய்) ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது, ஜேர்மனி நாடாளுமன்றத்தில் இடதுசாரி உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இந்த நிலையில், காஸாவில் குடியிருக்கும் ஒருவர் சார்பாக, மேலதிக ஆயுத ஏற்றுமதியை தடை செய்யும் நோக்கில் பிராங்பேர்ட் நிர்வாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான ECCHR தெரிவித்துள்ளது.
குறித்த மனுவில், காஸாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது ஜேர்மன் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும், ஜேர்மனியின் ஆயுதங்கள் அப்பாவி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும், ஜேர்மனி உடனடியாக இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சட்டத்தை மீறுகிறது
முன்னதாக, ஒவ்வொரு ஆயுத ஏற்றுமதியையும் தனித்தனியாக ஆராய்வதாகவும், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டம் உட்பட பல காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்வதாகவும் ஜேர்மன் அரசாங்கம் முன்பு கூறியுள்ளது.
ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஏற்றுமதி செய்யப்படும் ஆயுதங்கள் போர்க்குற்றங்களைச் செய்ய பயன்படுத்தப்படும் என்றால் ஆயுத பரிமாற்றங்களை தடை செய்யலாம் என குறிப்பிட்டுள்ள ECCHR, ஜேர்மனியின் ஆயுத ஏற்றுமதி ஒப்பந்தமானது சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்றும் பதிவு செய்துள்ளது.
காஸா மீது ஓராண்டாக இஸ்ரேல் முன்னெடுத்துவரும் பழி வாங்கும் நடவடிக்கையில், இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 43,000 கடந்துள்ளதாக காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |