ஜேர்மனியில் வேலை இல்லாதவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை! புதிய நலத்திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
புதிய நலத்திட்டத்திற்கு ஜேர்மன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜேர்மன் மக்கள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தை அனுபவித்து வருவதால், சமூக நலத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டிய அவசரம் அதிகரித்துள்ளது.
நலத்திட்டத்தில் மாற்றம்
இந்நிலையில், ஜேர்மன் நாடாளுமன்றம் வியாழன் அன்று வேலையின்மை நலன்களுக்கான Bürgergeld சமூக நலத்திட்டத்தில் கொண்டுவந்துள்ள மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இந்த புதிய நலத்திட்டம் தற்போதைய Hartz IV நலத்திட்டத்தில் மாற்றங்களை செய்து கொண்டுவரப்பட்டது.
Reuters
Hartz IV நலத்திட்டத்தின் படி, ஜேர்மனியில் தற்போது வேலை கிடைக்காத அல்லது வேலை செய்ய முடியாத எவரும் அடிப்படை சமூகப் பாதுகாப்பைப் பெறும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த பணம் வீட்டு வாடகை, வெப்பம் மற்றும் தண்ணீர், மளிகை பொருட்கள் மற்றும் சுகாதார காப்பீடு போன்ற அடிப்படை வாழ்க்கை செலவுகளை ஈடுகட்ட உதவியாக இருக்கும்.
இந்த செலவுகளை ஈடுகட்ட ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் நீண்ட காலமாக வாதிட்டனர்.
இதையடுத்து, ஜேர்மனியின் கூட்டணி அரசங்கம் சில மாற்றங்களுடன் முன்மொழிந்த புதிய நடத்தின் பெயர் தான் Bürgergeld (குடிமக்கள் வருமானம்).
புதிய நலத்திட்டம்
இந்த புதிய நலத்திட்டமானது ஜனவரி 2023 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த திட்டத்தில் பயனடைய தகுதியை உடையவர்களுக்கு மாதம் 503 யூரோ வழங்கப்படும். இப்போது, Hartz IV திட்டத்தின்படி 449 யூரோ வஸ்ங்கப்பட்டு வரும் நிலையில், ஜனவரி முதல் கூடுதலாக 54 யூரோக்கள் கூடுதலாக வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, குழந்தைகளை கொண்ட குடும்பங்கள் அதிகப் பணத்தைப் பெறுவார்கள். 14 முதல் 17 வயதுடையவர்களுக்கு 420 யூரோ, 6 முதல் 13 வயதுடையவர்களுக்கு 348 யூரோ, 5 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு 318 யூரோக்கள் வழங்கப்படும்.
திட்டங்களின்படி, பலன்களைப் பெறுபவர்கள், அதிகரித்த பயிற்சியின் மூலம் நிரந்தர வேலைவாய்ப்பிற்குத் தயாராக புதிய தொழில் திறன்களைப் பெறுவதற்கு அதிக ஆதரவைப் பெறுவார்கள்.
தொழிற்கல்வித் தகுதியின் போது, பெறுநர்களுக்கு மாதத்திற்கு மேலும் 150 யூரோக்கள் வழங்கப்படும், அல்லது பிற பயிற்சி நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் கூடுதலாக 75 யூரோக்கள் வழங்கப்படும்.
ஜேர்மனி தற்போது அனுபவித்து வரும் திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையையும் இந்த நடவடிக்கை குறைக்கும் என்று கருதப்படுகிறது.