ஜேர்மன் அதிகாரிகள் கெடுபிடி: வேறு நாடு பக்கம் திரும்பியுள்ள ஏடிஎம் கொள்ளையர்கள்
ஏடிஎம்களை வெடிவைத்துத் தகர்த்துக் கொள்ளையடிக்கும் கொள்ளையர்கள், ஜேர்மன் அதிகாரிகள் எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளால் வேறொரு நாட்டின் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள்.
வேறு நாடு பக்கம் திரும்பியுள்ள ஏடிஎம் கொள்ளையர்கள்
ஜேர்மனியில் ஏடிஎம்களை வெடிவைத்துத் தகர்த்துக் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களைத் தடுக்க ஜேர்மன் அதிகாரிகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக, கொள்ளையர்கள் ஆஸ்திரியா நாட்டில் தங்கள் கைவரிசையைக் காட்டத் துவங்கியுள்ளார்கள்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இந்த கொள்ளையர்கள், ஜேர்மனிக்கு வந்து, இரவு நேரங்களில் ஏடிஎம்களை வெடிவைத்துத் தகர்த்து, பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு, அருமையாக ஜேர்மனி அமைத்துள்ள நெடுஞ்சாலைகள் வழியாக தப்பியோடிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
ஆனால், நவீன தொழில்நுட்பம், இரவு நேரத்தில் ஏடிஎம் மையம் இருக்கும் கட்டிடங்களை பூட்டிவைத்தல், ஏடிஎம்மை தகர்த்தால் புகை உருவாதல், கருப்பு மை கொட்டி பணத்தை பயன்படுத்தமுடியாதபடி செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் ஜேர்மன் அதிகாரிகள்.
ஆகவே, ஜேர்மனியில் தங்களுக்கு பணம் கிடைப்பது கடினம் என்பதை உணர்ந்த கொள்ளையர்கள், இப்போது ஆஸ்திரியா நாட்டில் தங்கள் கைவரிசையை காட்டத் துவங்கியுள்ளார்கள்.

ஆஸ்திரியாவில் சமீபத்தில் சிக்கிய சில கொள்ளையர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
2022ஆம் ஆண்டில் ஜேர்மனியில் 496 ஏடிஎம் கொள்ளைகள் நடந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை இதுவரை மொத்தமே 115ஆக குறைந்துவிட்டது.
அதே நேரத்தில், ஆஸ்திரியாவிலோ ஏடிஎம் கொள்ளைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள ஆஸ்திரிய அதிகாரிகள், ஜேர்மனியில் கெடுபிடிகள் அதிகரித்ததே ஆஸ்திரியாவில் கொள்ளைகள் அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |