ஜேர்மனியில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட 60 ஆண்டுகால பாலம்! வைரலாகும் வீடியோ
ஜேர்மனியின் ஹெஸ்ஸே பகுதியில் 310 மீட்டர் நீளமுள்ள பாழடைந்த பாலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஜேர்மனியில் Wiesbaden நகரத்தில் ஹெஸ்ஸே பகுதியில் 1963-ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த Salzbachtal எனும் நெடுஞ்சாலை பாலம்.
இந்த பாலத்தின் தெற்குப் பகுதி தொய்வடைந்து, கட்டமைப்பிலிருந்து கான்கிரீட் விழுந்ததால், ரோலர் தாங்கி செயலிழந்ததால், பாதுகாப்புக் காரணங்களால் ஜூன் 2020-ல் மூடப்பட்டது.
இதனையடுத்து, அதே இடத்தில் மற்றோரு புதிய பாலம் கட்ட ஜேர்மன் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.
அதற்கு முதலில் இந்த பாலத்தை தகர்க்கவேண்டும் என்பதால், கடந்த நவம்பர் 6, 2021 அன்று 220 கிலோ வெடிபொருட்களைப் பயன்படுத்தி நிபுணர்கள் அந்த பாலத்தை வெடிக்கச்செய்து தகர்த்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் தூசுகளால் புகை மூட்டமாகக் காணப்பட்டது.
பாலத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்படுவதற்கு முன்பே, அதனைச் சுற்றி 250 மீட்டர் எல்லைக்குள் இருந்து சுமார் 140 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
வைஸ்பேடனில் உள்ள இந்த மேம்பாலம் தகர்க்கப்படுவதற்கு முன், ஒவ்வொரு நாளும் சுமார் 90,000 வாகனங்கள் பயணிக்க உதவியது.
பல மாதங்கள் திட்டமிட்டு, பாலத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ரயில் பாதைகள் அகற்றப்பட்டன, அதே நேரத்தில் அருகிலுள்ள 750 துளைகள் போட்டு இரண்டாம் உலகப் போரின் வெடிக்காத குண்டுகளுக்காக தேடப்பட்டன.
Photo: Boris Roessler/Pool via REUTERS
இங்கு புதிய பாலம் கட்டப்படுவதற்கு முன், தொழிலாளர்கள் முதலில் சுமார் 15,000 டன் இடிபாடுகளை சுத்தம் செய்ய வேண்டும்.
ஏற்கெனெவே கட்டமைப்பின் தெற்குப் பகுதி தயாரான நிலையில், 2023-ஆம் ஆண்டு வரை பாலம் முழுவதுமாக திறக்கப்படாது, ஒட்டுமொத்தமாக 2026-ஆம் ஆண்டு இந்த கட்டுமானம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
