வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை: ஜேர்மனியில் நடத்தப்பட்ட சோதனை முயற்சியில் ஆச்சரிய முடிவுகள்
உலக நாடுகள் பல, வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை என்னும் திட்டத்தை முயற்சித்துப் பார்த்துக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஜேர்மனியிலும் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை திட்டத்தை ஆய்வு நிறுவனம் ஒன்று சோதனை முயற்சியாக நடத்திப் பார்த்தது.
விளைவு? ஆச்சரியமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன!
வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை
ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள Münster பல்கலைக்கழகமும், பணி ஆலோசனை நிறுவனம் ஒன்றும் இணைந்து சோதனை முயற்சியாக 45 நிறுவனங்களில் வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை திட்டத்தை நடத்தின.
பணி நேரத்தில், குறிப்பிட்ட நேரத்துக்கு மொபைல் முதலான மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்தாமல் பணியில் மட்டும் கவனம் செலுத்த பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
விளைவு? உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாததுடன் பணியாளர்களுக்கு குடும்பத்துடன் நேரம் செலவிடவும், உடற்பயிற்சி செய்யவும் கூடுதலாக நேரம் கிடைத்தது.
தற்போது, அந்த சோதனையில் பங்கேற்ற பல நிறுவனங்கள், வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை திட்டத்தை தொடர்வது என முடிவு செய்துள்ளன.
மேலும், ஜேர்மனியில் நிலவும் பணியாளர் தட்டுப்பாடு உலகம் அறிந்ததே. ஆனால், இந்த வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை திட்டம் குறித்து அறிந்ததால், வேலைக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
என்றாலும், ஜன்னல் தயாரிப்பு நிறுவனங்கள் முதலான சில நிறுவனங்களில் இந்த திட்டம் வேலைக்கு ஆகவில்லை.
அத்துடன், வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்பதால், அந்த நான்கு நாட்களும் நாளொன்றிற்கு 9 மணி நேரம் வேலை செய்யவேண்டியுள்ளது.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்கள், அதிக நேரம் அலுவலகத்தில் பணி செய்யவேண்டி இருப்பதால், பிள்ளைகளை மாலையில் பள்ளியிலிருந்து அழைத்துவருவதில் பிரச்சினை உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆக, இந்த வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை திட்டத்தின் வெற்றி, பணியாளர்கள் பணி செய்யும் துறையைப் பொருத்தே அமைகிறது எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |