ஜேர்மனியில் உலகின் உயரமான காற்றாலை கட்டுமானம் நிறைவு
Germany builds world’s tallest wind turbine: உலகின் மிக உயரமான காற்றாலை ஜேர்மனியில் கட்டப்படுகிறது.
உலகின் உயரமான காற்றாலை
ஜேர்மனியின் Brandenburg மாநிலத்தில் Schipkau என்ற சிறிய நகரில், உலகின் உயரமான காற்றாலை (Wind Turbine) கட்டுமானம் நிறைவடைந்துள்ளது.
நிலக்கரி சுரங்கங்களால் பிரபலமான இந்த பகுதி, தற்போது சுத்தமான ஆற்றல் உற்பத்திக்கான மையமாக மாறியுள்ளது.

இருமடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும்
இந்த காற்றாலை 365 மீட்டர் உயரம் கொண்டது. இது பெர்லின் தொலைக்காட்சி கோபுரத்தை (Berlin TV Tower) விட மூன்று மீட்டர் குறைவானது.
100 மாடி கட்டிடத்திற்கு இணையான இந்த கட்டமைப்பு, 300 மீட்டர் உயரத்திற்கு மேல் வீசும் வலுவான காற்றை பயன்படுத்தி, இருமடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
கட்டுமானத்தில் சவால்கள் அதிகம் இருந்தன. 2025 இறுதியில் எஃகு பாகங்களில் பிரச்சினை ஏற்பட்டதால் வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், GICON நிறுவனம் பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
இந்த காற்றாலை, வருடத்திற்கு 30-33 GWh மின்சாரம் உற்பத்தி செய்யும். இது சுமார் 7,500 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கும் அளவிற்கு போதுமானது. மேலும், மின்சார உற்பத்தி செலவு ஒரு KWh-க்கு 5 சென்ட்-க்கு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம், நிலக்கரி சுரங்கப் பகுதிகளை சுத்தமான ஆற்றல் மையங்களாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும். எதிர்காலத்தில், இங்கு இரட்டை நிலை காற்றாலை மற்றும் தரையில் சோலார் பூங்கா அமைக்கப்பட்டு, ஆண்டு முழுவதும் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் ஹைபிரிட் பவர் பிளாண்ட் உருவாக்கப்படும்.
ஜேர்மனி, 2030-க்குள் கூடுதல் 12 GW காற்றாலை திறன் அமைக்க திட்டமிட்டுள்ளது. இது, ஐரோப்பாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |