உக்ரைனின் Bars ஏவுகணைகளை வாங்க ஜேர்மனி திட்டம்
Germany Buys Ukraine’s Bars Missiles: உக்ரைனின் Bars ஏவுகணைகளை வாங்க ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனி, உக்ரைனில் உருவாக்கப்பட்ட குறைந்த செலவிலான Bars எனப்படும் க்ரூஸ் ஏவுகணைகளை தனது ஆயுதப் படைகளுக்காக வாங்கத் திட்டமிட்டுள்ளது.
இதன்படி முதல்முறையாக, உக்ரைன் தயாரித்த தாக்குதல் ஆயுதத்தை ஜேர்மனி நேரடியாகப் பயன்படுத்தவுள்ளது.

Bars ஏவுகணை, ஜெட் சக்தியால் இயங்கும், 1,000 கி.மீ. வரை தூரம் தாக்கும் திறன் கொண்டது. 105 கிலோ வரை வெடிகுண்டுகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.
உக்ரைனில் இது “ட்ரோன் ஏவுகணை” என அழைக்கப்படுகின்றது. ஆனால் ஜேர்மனி இதை குறைந்த செலவிலான க்ரூஸ் ஏவுகணை என வகைப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக சிறிய தொகுதி ஏவுகணைகள் வாங்கப்பட்டு, அடுத்த ஆண்டு தொழில்நுட்ப சோதனைகள் நடத்தப்படும். முடிவுகள் திருப்திகரமாக இருந்தால், பல நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் வாங்கப்படும்.
Bars ஏவுகணைகள், உக்ரைன் ரஷ்யாவின் இராணுவ தளங்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை தாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, Bars-ஐ ரஷ்யாவை தாக்கும் முக்கிய ஆயுதங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், உக்ரைன்-ஜேர்மனி கூட்டு நிறுவனத்தின் மூலம் Bars ஏவுகணைகள் ஜேர்மனியிலேயே தயாரிக்கப்பட்டு, உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இப்போது அதே நிறுவனம் ஜேர்மனிக்காகவும் தயாரிக்க உள்ளது.
இது, NATO நாடுகள் உக்ரைன் தொழில்நுட்பத்தை தங்களது இராணுவத்திற்காக பயன்படுத்தும் புதிய போக்கின் ஒரு பகுதியாகும். டென்மார்க், எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளும் உக்ரைன் ஆயுதங்களை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன.
ஜேர்மனி, 780 பில்லியன் யூரோ மதிப்பிலான மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், நீண்ட தூர ஆயுதங்களை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. அமெரிக்காவின் Tomahawk ஏவுகணைகள் விலை உயர்ந்தவை என்பதால், Bars போன்ற குறைந்த செலவிலான ஆயுதங்களை வாங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |