அகதி போல் நடித்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட ராணுவ வீரருக்கு ஜேர்மனி தண்டனை
ஜேர்மனியில் சிரிய அகதி போல் காட்டிக்கொண்டு மூத்த அரசியல்வாதிகள் மீது தீவிர வலதுசாரி தாக்குதல் நடத்த சதி செய்ததற்காக ஜேர்மன் நீதிமன்றம் ஒரு முன்னாள் ராணுவ வீரருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு தீவிரமான வன்முறைச் செயலைத் திட்டமிட்டதற்காக குற்றவாளி என்று தலைமை நீதிபதி கிறிஸ்டோப் கொல்லர் கூறினார்.
இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜேர்மனியில் ஆயுதப் படையைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரதிவாதியான ஃபிராங்கோ ஆல்பிரெக்ட் (33), மே 2021 முதல் மேற்கு நகரமான பிராங்பேர்ட்டில் உள்ள பிராந்திய உயர் நீதிமன்றத்தின் முன் குற்றவாளி கூடண்டில் நிறுத்தப்பட்டார்.
ஆயுதப் படையில் லெப்டினன்டாக இருந்த ஃபிராங்கோ ஆல்பிரெக்ட், தனது தாக்குதல் இலக்குகளில் அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு முக்கிய யூத மனித உரிமை ஆர்வலர் ஆகியோரை கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டது. அவர் ஒரு பெரிய அரசியல் தாக்கத்துடன் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தார்.
2015-16 புலம்பெயர்ந்தோர் வருகையின் உச்சத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜேர்மனியில் நுழைந்தபோது, முழு தாடியுடன் மற்றும் போனிடெயில் கட்டியிருந்த அவரது நீண்ட தலைமுடியுடன் ஒரு கிறிஸ்தவ பழம் விற்பனையாளராக, தனது தோலை மேக்கப்பால் கருமையாக்கி, பணமில்லாத அகதியாக அதிகாரிகளை ஏமாற்றி அகதியாக வாழ தொடங்கினார். அரபு மொழி பேசாத போதிலும் குடியேற்ற அதிகாரிகளை 15 மாதங்கள் ஏமாற்றினார்.
2017-ஆம் ஆண்டு வியன்னாவின் சர்வதேச விமான நிலையத்தில் கழிவறையில் மறைத்து வைத்திருந்த நாஜி காலத்து கைத்துப்பாக்கியை மீட்க முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார், மேலும் அவரது கைரேகைகள் இரண்டு தனித்தனி அடையாளங்களுடன் பொருந்தியபோது அவரது மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
ஜேர்மன் இராணுவத்திடம் இருந்து எடுத்த துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இரண்டையும் பயன்படுத்தி தாக்குதலை நடத்த ஆல்பிரெக்ட் திட்டமிட்டிருந்ததை நீதிமன்றம் கண்டறிந்தது.
அவருக்கு ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை கோரிகை வைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று அவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
தனது விசாரணையின் போது யூத-விரோத, இனவாத மற்றும் கடுமையான தேசியவாத கருத்துக்களை பலமுறை நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய ஆல்பிரெக்ட், அப்போதைய அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல், அகதிகளை வரவேற்பதன் மூலம் அரசியலமைப்பை நிலைநிறுத்தத் தவறிவிட்டார் என்று கூறினார்.