ஜேர்மனிக்கு இப்போது யார் செல்லலாம்? முக்கிய விதிமுறைகள் என்ன?
கோவிட் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்படும் நிலையில், இப்போது ஜேர்மனிக்கு யார் யாரெல்லாம் செல்ல முடியும் என்பது குறித்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் நான்காவது அலை தற்போது ஜேர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் தொற்று எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்கச் செய்துள்ளது. சில இடங்களில், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, இதனால் பொது நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, பயணக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஜேர்மனியின் சில பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று, தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு ஜேர்மனி இன்னும் அனுமதி அளித்துள்ளது என்றாலும், ஜேர்மனிக்கு வருவதற்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது.
இந்த நிலையில், ஜேர்மனிக்குள் நுழைய விரும்பும் எவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் என்ன? தனிமைப்படுத்தல் விதிகள் என்ன? ஜேர்மன் விடுமுறைக்கு வருபவர்கள் மீண்டும் வீடு திரும்பும்போது நினைவில் கொள்ள வேண்டியது என்ன? போன்ற சில முக்கியமான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
யார் ஜேர்மனிக்குள் நுழைய முடியும்?
12 வயது முதல் அனைவரும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் மற்றும் எந்தப் போக்குவரத்து மூலம் வருகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அனுமதிக்கப்படுவர்.
அவர்கள் தடுப்பூசி முழுமையாக செலுத்தி இருக்கவேண்டும், தொற்று பாதிப்பிலிருந்து மீண்டிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எதிர்மறையான கோவிட்-19 சோதனைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தத் தேவை ஜனவரி 15, 2022 வரை அமுலில் இருக்கும். அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்தும், ஷெங்கன்-தொடர்புடைய ஐஸ்லாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளிலிருந்தும் நுழைய முடியும்.
மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜேர்மனிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்களா?
சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே மூன்றாம் நாடுகளில் இருந்து ஜேர்மனிக்குள் நுழைவது சாத்தியமாகும். ஜேர்மனியின் மூன்றாம் நாடுகளின் பட்டியலில் வசிப்பவர்கள், மேற்குறிப்பிட்ட ஆவணத் தேவைக்கு உட்பட்டு எந்த நோக்கத்திற்காகவும் ஜேர்மனிக்குள் நுழையலாம்.
யார் தனிமைப்படுத்தபட வேண்டும்?
முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள், தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் அல்லது எதிர்மறையான COVID-19 சோதனைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கத் தவறிய அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல், அதிக ஆபத்துள்ள நாடுகள் மற்றும் வைரஸ் மாறுபாடுள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் ஜெர்மனியில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் சுய-தனிமையில் இருக்க வேண்டும், அதேசமயம் வைரஸ் மாறுபாடுள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் 2 வாரங்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த நபர்கள் ஐந்தாவது நாளில் எதிர்மறையான சோதனை முடிவை வழங்க முடிந்தால் சுய-தனிமைப்படுத்தலை நிறுத்தலாம். வைரஸ் மாறுபாடுகள் உள்ள இடங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த வாய்ப்பு இல்லை.