புலம்பெயர்ந்தோர் தொடர்பில் அதிகரிக்கும் அழுத்தம்... குற்றவாளி ஒருவரை நாடு கடத்திய ஜேர்மனி
சிரியாவில் 14 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, செவ்வாயன்று ஜேர்மனி ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியை சிரியாவிற்கு நாடு கடத்தியுள்ளது.
கடுமையான நிலைப்பாடு
புலம்பெயர் விவகாரம் தொடர்பில் ஜேர்மன் அரசாங்கம் வாக்காளர்களின் கவலைகளைத் தாங்கள் கையாண்டு வருவதை அவர்களுக்கு உணர்த்த முயற்சிக்கும் நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

ஜேர்மனியில் சுமார் ஒரு மில்லியன் சிரியர்கள் வசிக்கின்றனர், ஆனால் குடியேற்றம் தற்போது வாக்காளர்களின் கவலைகள் குறித்த ஆய்வுகளில் முதலிடத்தில் உள்ளது. மட்டுமின்றி தீவிர வலதுசாரிகளான, குடியேற்றத்திற்கு எதிரான AfD கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்த நெருக்கடியை எதிர்கொள்ள சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் தொடர்பாகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். நாடுகடத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து சிரியா மீது கவனம் திரும்பியுள்ளது. சிரியாவைச் சேர்ந்த அந்தக் குற்றவாளி செவ்வாய்க்கிழமை காலை டமாஸ்கஸில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிக ஆபத்தில் ஆழ்த்தும்
மேலும், மற்றொரு குற்றவாளி ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாகவும், இது ஒரு வாரத்தில் அங்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது நாடு கடத்தல் நடவடிக்கை என்றும் அது கூறபப்டுகிறது.
இதனிடையே, குடியேறிகளை அந்த இரண்டு நாடுகளுக்கும் திருப்பி அனுப்புவது அவர்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தும் என்று விமர்சகர்கள் வாதிட்டுள்ளனர்.

சிரியாவுக்கு அனுப்பப்பட்ட அந்த நபர், வடமேற்கு ஜேர்மனியில் கடுமையான கொள்ளை, உடல்ரீதியான தாக்குதல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் ஆகிய குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆப்கானியக் குற்றவாளி, மற்ற குற்றங்களுடன் சேர்த்து, வேண்டுமென்றே உடல்ரீதியான தீங்கு விளைவித்த குற்றத்திற்காகவும் தெற்கு பவேரியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |