ஜேர்மனியில் முதல் முறையாக குழந்தையை பாதித்த குரங்கம்மை தொற்று! மருத்துவர்கள் ஆய்வு
குரங்கம்மை வைரஸ் தொடர்ந்து பரவி வரும் நிலையில், ஜேர்மனியில் முதல் முறையாக நான்கு வயது பெண் குழந்தைக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இரண்டு பெரியவர்களுடன் வாழ்ந்த அந்த சிறுமிக்கு வைரஸ் தொற்று இருப்பதை ஜேர்மன் சுகாதார அதிகாரிகள் கண்டறிந்தனர். ஆனால் தற்போது அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (RKI) கடந்த வாரம் பதின்ம வயதினரிடையே குரங்கம்மை தொற்று பரவுவதை உறுதி செய்தது. ஜேர்மனியில் இதுவரை 2,900 குரங்கம்மை தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மே மாதத்திலிருந்து ஐரோப்பாவில் குரங்கம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இருப்பினும் மக்களுக்கு இதனால் ஆபத்து குறைவாக இருப்பதாக RKI கூறியது. ஆனால் அது நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குரங்கம்மை தொற்றுநோயைத் தடுக்க, தடுப்பூசி பிரச்சாரத்தை நாடு தொடங்குவது முக்கியம் என்று ஜேர்மனியின் சுகாதார நிலைக் குழு தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் RKI-யிடம் 40,000 டோஸ் ஜின்னியோஸ் தடுப்பூசி இருப்பதாகக் கூறியுள்ள நிலையில் , மேலும் 200,000 டோஸ்களை ஆர்டர் செய்துள்ளது.
குரங்கம்மை தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது, மேலும் தடுப்பூசிகளின் விநியோகத்தை அதிகரித்துள்ளது. 9,000க்கும் மேற்பட்ட குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. நியூயார்க் தற்போது வைரஸின் மையமாக உள்ளது, பெரும்பாலான பாதிப்புகள் ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆண்களை உள்ளடக்கியதாக அறிக்கைகள் கூறுகின்றன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஆப்பிரிக்காவிற்கு வெளியே உலகளவில் குறைந்தது 78 நாடுகளில் 18,000-க்கும் மேற்பட்ட மக்கள் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்போது ஐரோப்பாவில் பெரும்பாலான பாதிப்புகள் உள்ளன.