ஜேர்மனியில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு திடீர் தலைசுற்றல்: சிகிச்சை அளித்தவர்களுக்கும் தலைசுற்றல்
ஜேர்மன் நகரமொன்றில், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிலருக்கு திடீரென தலைசுற்றலும் வாந்தி வருவது போன்ற உணர்வும் ஏற்பட்டதால் மருத்துவ உதவிக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு தலைசுற்றல்
செவ்வாய்க்கிழமை மாலை Dresden நகரில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிலருக்கு திடீரென மயக்கமும் வாந்தி வருவது போன்ற உணர்வும் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக, 62, 66 மற்றும் 68 வயதுடைய மூன்று பெண்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட, உடனடியாக அவசர மருத்துவ உதவிக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அந்தப் பெண்களுக்கு சிகிச்சையளித்த நான்கு மருத்துவ உதவிக்குழுவினருக்கும் அதேபோல் உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக, என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக தீயணைப்புக் குழுவின் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அங்கு நச்சுக்காற்று எதுவும் இருப்பது தெரியவரவில்லை. அத்துடன், ஆக்சிஜன் அளவும் சரியாக இருந்துள்ளது.
இசை நிகழ்ச்சி நடைபெற்றபோது அரங்கத்தில் பணியாற்றிய பணியாளர்களை பொலிசார் விசாரித்துள்ளார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
என்றாலும், எதனால் மக்களுக்கு திடீரென இந்த உடல் நல பாதிப்பு ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவரவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |